மும்பை இந்தியன்ஸ் இளம் வீரர் காயத்தால் விலகல்.. ஆனால் புதிதாக கிடைத்த ஜாக்பாட் வீரர் – முழு விபரம்

0
454
Mumbaiindians

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது பெரிய சச்சரவுகளை உண்டாக்கியது. முதல் மூன்று போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்து, நான்காவது போட்டியில் டெல்லியை வென்று இருக்கிறது. இந்த நிலையில் அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் காயத்தால் வெளியேறியிருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளேயிங் லெவனில் முதன்மை விக்கெட் கீப்பராகவும் அதே சமயத்தில் துவக்க ஆட்டக்காரராகவும், இந்திய அணிக்காக விளையாடும் இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் இருந்து வருகிறார். மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு வினோத் இருந்து வந்தார். இவருக்கு முன் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்பொழுது ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியிருக்கிறார்.

- Advertisement -

இவருக்கு கடந்த ஆண்டு மூன்று போட்டிகளில் விளையாட மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதில் கடந்த ஆண்டு பந்துவீச்சில் மிக வலிமையாக இருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கவனிக்க வைத்தார். மேலும் அந்தப் போட்டியில் சூரியகுமார் யாதவுடன் இணைந்து 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்.

இந்த ஆண்டு இவருக்கு விளையாட வாய்ப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை. மேலும் கடந்த ஆண்டு பேட்டிங்கில் நிரூபித்து இருந்த நெக்கேல் வதேரா போன்ற பேட்மேனை வெளியில் இருக்க வேண்டியதாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவர் காயத்தால் வெளியேறி இருக்கிறார்.

இவருடைய இடத்திற்கு 24 வயதான சௌராஷ்டிராவின் விக்கெட் கீப்பிங் பேட்மேன் ஹர்விக் தேசாய் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் 20 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்திருந்து, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிக்கான ரன்னை அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : கனடா நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட இருந்த பும்ரா.. அவரே வெளியிட்ட ஆச்சரியமான தகவல்

இதுவரை 27 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் இவர் 30 ரன் ஆவரேஜில், 134 ஸ்ட்ரைக் ரேட்டில், 691 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் நான்கு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் 67.20 ரன் ஆவரேஜில், 175 ஸ்ட்ரைக் ரேட்டில் 336 ரன்கள் எடுத்து அதிரடியான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் என்பதும் முக்கியமானது.