ஐபிஎல்-ல் விட்டதை எம்எல்சி-ல் பிடித்தது மும்பை இந்தியன்ஸ்; சூப்பர் கிங்ஸை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

0
3586
MLC2023

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வென்றும், சீட்டில் ஒர்க்ஸ் அணியிடம் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தோற்றும் இருந்த காரணத்தினால், பிளே ஆப் சுற்றில் இரண்டு அணிகளும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் மோத வேண்டி இருந்தது!

இன்று எலிமினேட்டர் போட்டியில் டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தத் தொடர் முழுக்கவே டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளிசிஸ் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. அவர் ஆறு ரண்களில் வெளியேறினார்.

மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 35 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 38 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப் பிடித்தார். பேட்டிங் வரிசையில் நடுவில் வந்த மிலிந்த் குமார் 34 பந்துகளில் மூன்று பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் டேவிட் மில்லர் 10 பந்தில் 17 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தது.

இந்த ஆட்டத்திலும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் தரப்பில் டிரண்ட் போல்ட் நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவரது மிக சிறப்பான பந்துவீச்சு இந்த தொடர் முழுவதும் நீடிக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் சயான் ஜஹாங்கீர் 18 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 36 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் தந்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுமையாக 20 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நடுவில் வந்த டிம் டேவிட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 20 பந்தில் நான்கு சிக்ஸர்கள் உடன் 32 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கினார். இன்னொரு புறத்தில் நிலைத்து நின்று விளையாடிய குட்டி ஏபி.டிவில்லியர்ஸ் டிவால்ட் பிரிவியஸ் 33 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 41 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் நின்று, 19 ஓவர்களில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்றார்.

நாளை ஞாயிறு விடுமுறை நாளில் அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் பதிப்பின் இறுதிப்போட்டி சீட்டில் ஆர்கஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது. பட்டம் வென்று நடுவில் சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது புதியதொரு இறுதிப் போட்டி!