மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கி இருந்த ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் அல்லா கசன்பர் காயமடைந்ததால் அவருடைய இடத்திற்கு புதிய அதிரடியான வீரரை வாங்கி நிரப்பி அசத்தியிருக்கிறது.
இந்த முறை தக்க வைத்த வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சிறப்பான வீரர்களை தக்க வைத்து, மேலும் ஏலத்தில் மிகப் பொறுமையாக இருந்து போல்ட், தீபக் சகர், வில் ஜேக்ஸ் மற்றும் சான்ட்னர், அல்லா கசன்பர் ஆகியோரை வாங்கி மிகவும் பலமான அணியாக உருவெடுத்திருக்கிறது.
திடீரென ஏற்பட்ட பின்னடைவு
ஆப்கானிஸ்தானில் இருந்து இன்னொரு சுழல் இளம் நட்சத்திரமாக மர்ம சுழல் பந்துவீச்சாளர் அல்லா கசன்பர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் அறிமுக வீரரான இவருக்கு 4.8 கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்தது. அவர்களுக்கு சுழல் பந்துவீச்சாளர் பற்றாக்குறை இருந்தது இதன் மூலமாக தீர்க்கப்பட்டது.
எனவே தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட வீரர்களை வைத்து பார்க்கும் பொழுது மும்பை இந்தியன்ஸ் எல்லா ஏரியாக்களிலும் இந்த முறை மிகவும் பலமான அணியாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த முறை அந்த அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்லா கசன்பர் திடீரென காயம் அடைந்து சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் என இரண்டு முக்கிய தொடர்களில் இருந்தும் வெளியேறினார்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பவர் பிளே வீரர்
இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு அதே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மர்ம சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹமானை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இவர் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணிகளாலும் வாங்கப்படாமல் இருந்தார். இந்த நிலையில் இவரை வாங்கி சரியான இடத்திற்கு நிரப்பி கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணி இந்தியாவை பார்த்து கத்துக்கணும்.. 3வது பந்தையே தெறிக்க விட்ருவாங்க – பசித் அலி விமர்சனம்
இவர் மர்ம சுழல் பந்துவீச்சாளர் என்பதோடு புதிய பந்தில் பவர் பிளேவில் பந்து வீசும் திறமையும் கொண்டவர். சில நேரங்களில் இவர் இறுதிக்கட்ட ஓவர்களையும் சர்வதேச கிரிக்கெட்டில் வீசி இருக்கிறார். எனவே ஆட்டத்தின் எல்லா பகுதிகளும் பந்து வீசக்கூடிய ஒருவர் கிடைத்திருப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பலமாக மாறுகிறது. மேலும் இவர் ஐபிஎல் தொடரில் தனது 17வது வயதில் விக்கெட் கைப்பற்றி, மிகக்குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் விக்கெட் வீழ்த்தி பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






