காலில் பிரச்சினையுடன் இருக்கும் தோனி அடுத்த போட்டியில் ஆடுவாரா? – சிஎஸ்கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தகவல்!

0
138

காலில் சிறு சிறு பிரச்சனையுடன் இருக்கும் மகேந்திர சிங் தோனி, அடுத்த போட்டியில் இருப்பாரா? என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடி இரண்டு தோல்வி மற்றும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த போட்டியின் நடுவே கீப்பிங் செய்து வந்த தோனிக்கு காலில் சிறு பிரச்சனை இருந்தது. அவரே பிசியோ மருத்துவரை அழைத்து பிசியோ செய்துகொண்டு பின்னர் கீப்பிங்கை தொடர்ந்தார். பேட்டிங்கிலும் ரன்கள் ஓடுகையில் வழக்கமான வேகம் தெரியவில்லை. சற்று ஸ்லோவாகவே காணப்பட்டார்.

இதனால் அவருக்கு காலில் பிரச்சனை இருக்கிறதா? அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் விளையாட முடியுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி முடிந்த உடனேயே பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட தலைமை பயிற்சியாளர் பிளம்மிங் இது குறித்து பேட்டியளிக்கையில்,

“தோனிக்கு காலில் பிரச்சினை இருப்பது உண்மைதான். அதற்காக கவனத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் வீரர் என்பதால் விரைவில் குணமாகிவிடுவார். இது பெரிய அளவில் பிரச்சனை இல்லை. வெப்பம் காரணமாக மற்றும் இந்த வயது காரணமாக வரும் அசவுகரியம்தான். மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தோனி இருப்பாரா? என்பதை அணியின் மருத்துவர்கள் மற்றும் தோனியே முடிவு செய்வார்கள்.” என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று மாலை, சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விசுவநாதன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தோனி ஆகியோரின் உடல்நிலை குறித்து சில அறிவிப்புகளை கொடுத்தார். அதில், “தோனிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. கண்டிப்பாக அடுத்த போட்டியில் அவர் இருப்பார். அதற்காகத்தான் கவனத்துடன் பயிற்சியிலும் போட்டியிலும் விளையாடி வருகிறார். அவர் இல்லாமல் போட்டி இல்லை.” என்றார்.