23 வருடங்கள் இந்திய அணிக்கு பணியாற்றிப் பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள மித்தாலி ராஜ்

0
246
Mithali Raj

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என்று மிதாலி ராஜை குறிப்பிடலாம். இந்திய பெண்கள் கிரிக்கெட்டிற்கு கடந்த 23 வருடங்களாக வீராங்கனையாக மற்றும் கேப்டனாகப் பங்காற்றி வந்த மிதாலி ராஜ் இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

மிதாலி ராஜ் துரைராஜ்-லீலா தம்பதியினருக்குப் பிறந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்திய விமானப்படையில் வேலை செய்ததால், இவர் ராஜஸ்தானில் பிறந்தார். பின்பு இவரது தந்தை ஹைதராபாத்திற்கு இடம் மாறுதலாகி வந்தபொழுது, இங்கே பள்ளிப்படிப்போடு கிரிக்கெட்டையும் பயின்றார்.

- Advertisement -

முதன் முதலில் 1999ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், மொத்தம் 232 போட்டிகளில் 211 இன்னிங்ஸில் 7,805 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 சதங்களும், 64 அரைசதங்களும் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனை இவரிடம்தான் இருக்கிறது. 12 டெஸ்ட் போட்டிகளில் 19 இன்னிங்ஸில் 699 ரன்களை அடித்திருக்கிறார். இதில் 214 ரன் இரட்டை சதமும் அடக்கம். பெண்கள் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டக்காரர் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிக ரன் இவருடையதுதான். மேலும் 89 டி20 போட்டிகளில் 84 இன்னிங்ஸில் 2364 ரன்களையும் சேர்த்திருக்கிறார். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 97 நாட் அவுட். 17 அரைசதங்களும் அடித்திருக்கிறார்.

இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள அவர் தனது அறிக்கையில், “நாட்டைப் பிரதிநிதித்துவம் படுத்துவது ஒரு கெளரவமான விசயம். இந்திய அணிக்கு நான் இப்படியான பயணத்தில் ஒரு சிறுமியாகப் புறப்பட்டேன். இதில் சில ஏற்றத் தாழ்வுகள் உண்டு. இந்தப் பயணம் மகிழ்ச்சியும் சவாலுமாக அமைந்திருந்தது. எல்லாப் பயணங்களும் ஒருநாள் முடிவுக்கு வந்துதானே ஆகவேண்டும். இன்று எனது கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரும் நாள். இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த இரசிகர்களின் உங்களின் அன்புக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்.

இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை டாப்ஸி நடிக்கிறார். திரைப்படத்திற்காக கதையை ப்ரியா அவென் எழுத, சிரிஜித் முகர்ஜி இயக்குகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 15ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -