தொடர்ந்து 8 ஆட்டங்களில் மாஸ் ரெக்கார்டு.. பங்களாதேஷ் பரிதாபம்.. தென் ஆப்பிரிக்கா புள்ளி பட்டியலில் அதிரடி!

0
1521
Quinton

மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ரீசா ஹென்றிக்ஸ் 12 ரன்களில் ஆட்டம் நடந்தார். வான்டர் டேசன் 1 ரன்னில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த குயிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் இருவரும் அதிரடியாக 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மார்க்ரம் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஹென்றி கிளாசன் வர ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக விளையாடிய குயின்டன் டிகாக் இந்த உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது சதத்தை அடித்து, 140 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 174 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

ஹென்றி கிளாசன் தன் பங்குக்கு அதிரடியாக 49 பந்துகளில் 2 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்து கடைசியில் வெளியேறினார். டேவிட் மில்லர் இறுதிவரை களத்தில் நின்று 15 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணி 58 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட் இழந்து விட்டது. பின்பு வந்தவர்களை வைத்துக்கொண்டு மிகச்சிறப்பாக விளையாடிய மகமதுல்லா, தனது நான்காவது சதத்தையும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் தனது மூன்றாவது சதத்தையும் அடித்து அசத்தினார்.

சிறப்பாக விளையாடிய மகமதுல்லா 111 ரன்கள் எடுத்து வெளியேற, பங்களாதேஷ் அணி 46.4 ஓவர்களில், 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 149 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜெரால்டு கோட்சி 3 விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்க அணி கடைசியாகப் பெற்ற எட்டு வெற்றிகளை நூறு ரன்களுக்கும் மேற்பட்ட ரன் வித்தியாசத்தில் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு இது நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் நல்ல ரன்ரேட் பெற்றிருக்கின்ற காரணத்தினால் நியூசிலாந்து அணியை இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளி, தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது!