என் மண்டைக்குள்ள எத்தனை விஷயம் ஓடினாலும் ரன் எடுக்கறது மட்டும்தான் எனக்கு முக்கியம் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் அதிரடிப் பேச்சு!

0
465
Jaiswal

இந்திய அணி தற்பொழுது ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருக்க அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்க நான்காவது ஐந்தாவது போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடக்கிறது. இன்று இங்கு நான்காவது டி20 போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்தத் தொடரில் முதல் வாய்ப்பை பெற்ற ஷாய் ஹோப் 29 பந்துகளில் 45 ரன்கள், சிம்ரன் ஹெட்மயர் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 178 ரன் சேர்த்தது. இந்திய தரப்பில் அர்ஸ்தீப் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வென்றே ஆக வேண்டிய நிலைமையில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் களமிறங்கினார்கள். இந்த தொடரில் மொத்தமாக இந்திய பேட்டிங் யூனிட் சொதப்பி வந்ததற்கு, இந்த முறை இந்த இளம் ஜோடி சரியான பரிகாரத்தைச் செய்தது.

இருவரும் அதிரடியில் அதே சமயத்தில் புத்திசாலித்தனமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை மனரீதியாக நோகடித்தனர். பந்துகள் மைதானத்தின் எல்லைக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன. அபாரமாக விளையாடிய இருவருமே அரைசதம் எடுத்தார்கள். இந்த ஜோடி 165 ரன்கள் சேர்த்த பொழுது, கில் 47 பந்தில் 77 ரன்களுக்கு வெளியேறினார். 51 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்று வெற்றியை ஜெய்ஸ்வால் உறுதி செய்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடக்கம்.

- Advertisement -

வெற்றிக்குப் பிறகு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஸ்வால் பேசுகையில் ” நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது எளிதான ஒன்று கிடையாது. ஆனால் நான் தைரியமாக வெளியேறி ரசித்து விளையாட விரும்புகிறேன். ஹர்திக் பாய் மற்றும் அணி ஊழியர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் என்னிடம் பேசிய விதம் என் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

டி20 கிரிக்கெட்டில் என்னுடைய பேட்டிங் அணுகுமுறை என்பது, அணிக்கு என்ன தேவை? எப்படி என்னை வெளிப்படுத்திக் கொள்வது? என்பது பற்றியாகத்தான் இருக்கிறது. பவர் பிளேவில் என்னால் எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும்? அதை எவ்வளவு விரைவாக அடிக்க முடியும்? என்று மட்டும் நினைக்கிறேன்.

அதே சமயத்தில் நான் நிச்சயமாக ஆடுகளம் எப்படி இருக்கிறது என்றும் சரியாக கணிக்க முயல்கிறேன். அதேபோல் மற்ற நிலைமைகளையும் சரியாக உணர்ந்து கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் எனது நோக்கம் என்பது எப்பொழுதும் ரன்கள் எடுப்பது பற்றிதான்!” என்று கூறியிருக்கிறார்!