பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் ஃபிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கத்தினை வென்று இந்தியாவின் கணக்கை தொடங்கி இருக்கிறார்.
கடைசியாக 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி துப்பாக்கிச் சுடும் போட்டியில் கடைசியாக பதக்கங்கள் வென்ற நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து அந்த ஏக்கத்திற்கு மனு பாக்கர் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற்று வரும் நிலையில், துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் 221.7 மதிப்பெண்களை பெற்று வெண்கல பதக்கத்தினை வென்று இருக்கிறார்.
கொரியாவைச் சேர்ந்த கிம் யெஜி 241.3 மதிப்பெண்களை பெற்று வெள்ளி பதக்கத்தினை வென்றிருக்கும் நிலையில் அதே நாட்டைச் சேர்ந்த ஜின் யே ஓ 243.2 மதிப்பெண்கள் பெற்று தங்கப் பதக்கத்தை வேண்டிருக்கிறார். கடைசியாக 2012ம் ஆண்டு இந்திய அணி ராபிட் ஃபயர் ஃபிஸ்டல் போட்டியில் விஜயகுமார் வெண்கல பதக்கமும், 10 மீட்டர் ஏர் ரைப்பில் போட்டியில் சுகன் நரங் வெண்கல பதக்கமும் வென்றனர்.
அதற்குப் பிறகு இரண்டு ஒலிம்பிக் தொடர்கள் நடைபெற்ற நிலையில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒரு பதக்கம் கூட இல்லாத இந்திய அணி, தற்போது மனு பாக்கர் மூலம் இந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் கிடைத்திருக்கிறது. மனு பாக்கர் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜாரில் பிறந்துள்ள நிலையில் வளர்ந்து வரும் வீராங்கனைகளில் தாமதமாக இந்தியாவிற்கு வெளிப்பட்டு இருக்கிறார்.
வணிக கடற்படையில் தலைமை பொறியாளராக பணி புரியும் அவரது தந்தை ராம் கிஷன் பாக்கரின் 1,50,000 முதலீட்டில் பாக்கர் 16 வயதில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை பெற ஆரம்பித்திருக்கிறார். மனு பாக்கர் குத்துச்சண்டை மற்றும் மார்ஷியல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளிலும் சிறந்தவராக விளங்கி இருக்கிறார். இருப்பினும் 2016ஆம் ஆண்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில் 2018ஆம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையில் மூன்று தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருக்கிறார்.
முந்தைய ஒலிம்பித் தொடர் டோக்கியோவில் நடைபெற்ற போது பதக்கம் வெல்வதற்கு தகுதியான நபராக மனு பாக்கர் இருந்த நிலையில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஏழாவது மற்றும் 15வது இடங்களை பிடித்திருந்த நிலையில், 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் 12வது இடம் பெற்றிருந்ததால் இவரால் பதக்கம் பெற முடியாமல் போனது. இருப்பினும் இந்த ஆண்டு பெண்கள் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும் பெற்றிருக்கிறார்.