அபுதாபியில் தற்போது நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பிளே ஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் அணியாக முன்னரே வெளியேறிவிட்டது.
மறுபக்கம் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டத்தில் மும்பை அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தினால் கொல்கத்தா அணியை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு சென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
அப்படிப்பட்ட முக்கியமான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் துணை கேப்டன் புவனேஸ்வர் குமார் இன்றைய போட்டியில் இடம் பெறவில்லை. அவர்கள் இடம்பெறாத காரணத்தை, இன்றைய போட்டியில் தலைமை தாங்கி வரும் மனிஷ் பாண்டே விளக்கிக் கூறியுள்ளார்.
முதல் முறையாக ஹைதராபாத் அணியை தலைமை தாங்கும் மனிஷ் பாண்டே
இன்றைய போட்டியில் முதல் முறையாக ஹைதராபாத் அணியை மணிஷ் பாண்டே தலைமை தாங்கி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, கேன் வில்லியம்சன் முழங்காலில் சிறிய காயம் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதென கூறினார். அதேபோல புவனேஷ்வர் குமாருக்கும் முழங்காலில் சிறிய காயம் இருந்தது தெரியவந்தது.
எனவே இவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்கும் அடிப்படையில், இன்றைய போட்டியில் இவர்கள் இருவரும் விளையாடவில்லை என்று கூறினார். அதே சமயம் முதலில் பேட்டிங் செய்யவே நாங்களும் நினைத்தோம். ஆனால் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். அவர்களுக்கு இது முக்கியமான போட்டி என்பது எங்களுக்கு நன்கு தெரியும். அவர்களை கட்டுப் படுத்தும் விதத்தில் எங்களுடைய ஆட்டம் இன்று இருக்கும் என்றும் சிறிது புன்னகையுடன் மணிஷ் பாண்டே நம்பிக்கை தெரிவித்தார்.
அபாரமாக விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்ததை போல அதிரடியாக விளையாடி வருகிறது. பாக்கெட் டைனமோ கிஷன் கிஷன் சர வெடியை போல் வெடித்து 32 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் என 84 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து இந்தியாவின் 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தி வருகிறார். 200 ரன்களை கடந்து நல்ல நிலையில் இருக்கும் அந்த அணி, இன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்கிற ஆவலுடன் தற்போது அனைத்து ரசிகர்களும் இந்த போட்டியை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.