முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங், வரவிருக்கும் ஆசிய கோப்பை 2025-ல் வருண் சக்ரவர்த்தி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணித்துள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், வருண் சக்ரவர்த்தியுடன் குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் ஆசிய கோப்பை பங்கேற்கின்றனர். முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மனிந்தர், வருணின் வெவ்வேறு போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப பந்துவீச்சை மாற்றியமைக்கும் திறனைப் பாராட்டினார்.
வருண்சக்கரவர்த்தி ஒரு புத்திசாலி:
இது குறித்து பேசிய மனிந்தர், “வருண் சக்கரவர்த்தி ஒரு திறமையான வீரர். மிகவும் புத்திசாலி, உலக கிரிக்கெட்டில் இப்படியானவர்கள் அதிகம் இல்லை. எனவே, ஆசிய கோப்பையில் இந்தியாவின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில் அவர் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் மிகவும் புத்திசாலியான பந்து வீச்சாளர்.”
“வெவ்வேறு சூழ்நிலைகளில் எப்படி பந்து வீசுவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் பேட்ஸ்மேன்களை மிகச் சிறப்பாகப் புரிந்து கொள்கிறார். வெளியில் அவர் வெறுமையாகத் தோன்றலாம். ஆனால் உள்ளே அவர் ஒரு உண்மையான சிந்தனையாளர். ஆசிய கோப்பையில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஆடவைத்தால், குல்தீப் யாதவை ஆடவைப்பார்களா என்று சந்தேகமாக உள்ளது. “
குல்தீப் ஆடியிருந்தால் வேறு..
“அக்சர் படேல் ஆடுவார், ஏனெனில் அவர் பேட்டிங்கும் செய்ய முடியும் மற்றும் வருண் சக்ரவர்த்தியும் ஆடுவார். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் குல்தீப் ஆடியிருந்தால், இந்தியா 3-1 என்று தொடரை வென்றிருக்கும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்து வீச்சு புரியாது. அவரது கூக்லிகளையோ அல்லது லெக்-ஸ்பின்னையோ அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.”
இதையும் படிங்க: ரஷித் கான் உலக சாதனை.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாரும் செய்யாத ரெக்கார்டு
“முதல் டெஸ்ட் போட்டியில், அவர்கள் 371 ரன்களை துரத்தினர். குல்தீப் நான்காவது மாலை மற்றும் ஐந்தாவது நாளில் ஆடியிருந்தால், இங்கிலாந்து அந்த ரன்களைத் துரத்தியிருக்க வாய்ப்பே இல்லை,” என்று மணிந்தர் சிங் தெரிவித்தார். வருண் சக்கரவர்த்தியை பொறுத்தவரை தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய நம்பிக்கையுடன் ஆசிய கோப்பைக்கு வருகிறார்.






