“உலககோப்பையில் தப்பு செய்யாதிங்க.. இந்தியாவின் திறமையான துணிச்சலான ஸ்பின்னர் இவர்தான்” – ஹர்பஜன் பேட்டி

0
125
Harbajan

இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கி ஜூலை இறுதி வரையில் நடக்க இருக்கிறது.

இந்த இரு நாடுகளின் ஆடுகளங்களின் நிலைமைகளை பார்க்கும் பொழுது, அது ஆசிய நாடுகளின் ஆடுகளங்களில் நிலைமையை ஒத்ததாகவே இருக்கும். ஆடுகளங்கள் கொஞ்சம் மெதுவாகவும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் அமையும்.

- Advertisement -

எனவே இந்த டி20 உலகக்கோப்பையில் பங்குபெறும் முக்கிய அணிகள் எல்லாமே தங்களுடைய சுழற் பந்துவீச்சு படையை வலிமையானதாக உருவாக்கிக் கொண்டு வரும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இந்த வகையில் தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மூவரையும் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக வைத்திருக்கிறது. குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் முழுநேர சுழற் பந்துவீச்சாளர்களாக வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் டி20 உலகக் கோப்பைக்கு இவர்கள் போதும் என்று கருதுகிறது. மேலும் இந்த ஐந்து பேரில் மூன்று பேருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். இரண்டு பேர் எப்படியும் வாய்ப்பை இழப்பார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது சுழல் பந்துவீச்சு படையை டி20 உலகக்கோப்பைக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உருவாக்குவதில் தவறு செய்வதாக ஹர்பஜன்சிங் அதிரடியான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் சுழற் பந்துவீச்சாளர்களில் முக்கியமானவராக சாகலைதான் முன்னணியில் வைத்திருப்பேன். அவர் ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. மேலும் அவருக்கும் இது பற்றி எதுவும் தெரியாது என்று நினைக்கிறேன்.

அவரைவிட துணிச்சலான மற்றும் திறமையான லெக் ஸ்பின்னர் தற்பொழுதும் கூட இந்திய கிரிக்கெட்டில் யாரும் கிடையாது என்று நான் மிக உறுதியாக சொல்வேன். அவர் மிகவும் கூர்மையான மனம் கொண்டவர்.

என்னுடைய இரண்டாவது ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா. ஒரு ஆப் ஸ்பின்னர் ஆக வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும். ஆனால் அணி நிர்வாகம் மற்றும் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது வேறு.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இந்திய ஆடுகள நிலைமைகளை ஒத்ததாக இருக்கும். நான் அங்கு சென்று விளையாடிய காலங்களில் சுழற் பந்துவீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைப்பு இருந்ததை பார்த்திருக்கிறேன்.

எனவே நாம் நிலைமைகளுக்கு சரியான வீரர்களை எடுத்து, சரியான அணியை உருவாக்க வேண்டும். நிலைமைகளைத் தாண்டி அதிரடியாக எதையும் சிந்திக்க கூடாது. ஆசிய நாட்டு ஆடுகளங்கள் போல இருக்கின்ற காரணத்தினால், நாம் நம்முடைய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்திருக்க வேண்டும்” என கூறி இருக்கிறார்.