நேற்று பஞ்சாப் ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால் இந்திய அணி ஒரு போட்டி மீதம் இருக்கும் நிலையிலேயே தொடரை வென்றது.
இந்த போட்டியில் டாஸ் தோற்று நேற்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த பொழுது பவர் பிளேவில் அதிக பந்துகளை ஜெய்ஸ்வால் எடுத்து விளையாடினார். இதன் காரணமாக ருத்ராஜ் பவர் பிளேவில் அதிக பந்துகளை சந்திக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து பவர் பிளே கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து உடனே ஸ்ரேயா மற்றும் சூரியகுமார் யாதவ் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். எனவே ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ருத்ராஜுக்கு வந்தது.
இதன் காரணமாக அவர் ரிங்கு சிங் உடன் இணைந்து பொறுமையாக ஆட்டத்தை கட்டமைக்க ஆரம்பித்தார். 28 பந்துகளில் 32 ரன்கள் என அவர் அதிரடிக்கு மாறிய தருணம், எதிர்பாரா விதமாக பந்து அதிகம் திரும்ப, அவர் ஆட்டம் இழந்தார். ஆனால் இந்த தொடர் முழுக்கவே அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்கள் அடிப்பது குறித்து அவர் எந்தவித பதட்டத்தையும் காட்டுவது கிடையாது.
ருத்ராஜ் இந்த தொடர் முழுக்கவே தேவைக்கு தகுந்தபடி ஆடி வருகிறார். விக்கெட்டை நிலையாக வைத்து தேவைப்படும் நேரத்தில் அதிரடிக்கு மாறி ரன்களை கொண்டு வருவது அவருடைய செயல்பாடாக இருந்து வருகிறது. இப்படியான பழக்கம் தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து அவர் நேற்று பேசினார்.
இதுகுறித்து ருத்ராஜ் கூறும்பொழுது “இதை நான் சிஎஸ்கேவில் இருப்பதால் கற்றுக் கொண்டேன் என்று உறுதியாக கூறுவேன். ஏனென்றால் மகி பாய் எப்பொழுதும் சூழ்நிலைகளைப் படிப்பதில் ஆர்வமாக இருப்பார். விளையாட்டை புரிந்து கொண்டால் விளையாட்டில் எவ்வளவு முன்னேற முடியும் என்று உங்களுக்கே தெரியும். அவர் குறைவாகவோ அதிகமாகவோ தேவைப்படும் ரன் குறித்து செய்தி அனுப்புவார், விளையாடிக் கொண்டிருக்கும் நாம் ஆடுகளத்திற்கு சரியான ரன்களை கொண்டுவர வேண்டும்.
நீங்கள் எந்த இடத்தில் பேட்டிங் செய்கிறீர்கள் என்பது விஷயம் கிடையாது. நீங்கள் எவ்வளவு தூரம் எடுத்திருக்கிறீர்கள் என்பதும் முக்கியம் கிடையாது. நீங்கள் இருக்கும் குறிப்பிட்ட ஓவரில் எவ்வளவு ரன்கள் தேவை என்பது தான் விஷயம். எனவே நான் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நான் இதையே என்னுடைய ஆட்டத்தில் எப்பொழுதும் தொடர நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!