2025 ஐபிஎல் தகுதிச் சுற்று இரண்டாவது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்று அகமதாபாத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே இந்த தோல்வி குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
இந்தப் போட்டி குறித்து பேசுகையில், ஐந்து முறை சாம்பியனான தங்களது அணி சிறப்பாக விளையாடவில்லை என்று ஒப்புக்கொண்டார் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி அன்றைய தினம் தங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதாக பாராட்டினார். 200 ரன்கள் மேல் துரத்திய விதத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை மஹேலா ஜெயவர்த்தனே புகழ்ந்தார்.
“இது எங்களுக்கு ஒரு நல்ல சீசனாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் சரியான ஆட்டத்தை விளையாடவில்லை, அதற்கு விலையை செலுத்தினோம். நடப்பு சீசனில் எங்கள் பயணம் நன்றாக இருந்தது. ஆரம்பத்தில் இருந்து அணியாக ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக கிரிக்கெட் விளையாடினோம்.”
“பிளே ஆஃப்களுக்கு முன்னேறுவதற்கு எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. முதல் போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இன்றும் நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆடினோம் என்று நினைக்கிறேன், ஆனால் கிங்ஸ் எங்களை விட சிறப்பாக, குறிப்பாக பேட்டிங்கில், ஆடினார்கள்,” என்று மஹேலா ஜெயவர்த்தனே கூறினார்.
“பஞ்சாப் அணியினர், உறுதியாக இருந்தார்கள், குறிப்பாக 200 ரன்களை துரத்துவதில். இது அவ்வளவு எளிதல்ல. அவர்கள் அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தினார்கள். நாங்கள் சில தவறுகளை செய்தோம், குறிப்பாக இரண்டு கேட்ச்களை தவறவிட்டோம், ஆனால் விளையாட்டு அப்படித்தான் நடக்கிறது. முந்தைய போட்டியில் அதிர்ஷ்டம் எங்களுக்கு சாதகமாக இருந்தது. இது ஒரு நல்ல கிரிக்கெட் போட்டி, ஆனால் நாங்கள் பின்தங்கினோம்.”
இதையும் படிங்க: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் கிளாசன் ஒய்வு.. குடும்பத்திற்காக முடிவு எடுத்ததாக கருத்து
“மற்றவர்கள், குறிப்பாக அஷ்வினி, மிகச் சிறப்பாக பந்து வீசினார், சாண்ட்னர் நன்றாக பந்து வீசினார், ஹர்திக் நன்றாக வீசினார். எனவே இது வெறும் பும்ரா பற்றியது மட்டுமல்ல. அவர் முதல் பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தார். ஜோஷ் இங்லிஸ் நன்றாக பேட்டிங் செய்தார். 3-4 ஓவர்களில், அவர்கள் நன்றாக செயல்படுத்தினார்கள், அது ஒரு போராட்டமாக இருந்தது. ஒருவேளை நாங்கள் விக்கெட் எடுத்திருக்கலாம் அல்லது அவர்கள் நிலைமையை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்று மஹேலா கூறினார்.