இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் இரண்டாவது சுற்றின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் சர்வீசஸ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் விளையாடின.
இதில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வலுவான வீரராக உருமாறி இருக்கிறார்.
ருதுராஜ் அபார சதம்
விஜய் ஹசாரே டிராபி 2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவு ஆட்டத்தில் சர்வீசஸ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதி விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த சர்வீசஸ் அணி 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மோஹித் 61 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி மகாராஷ்டிரா அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய மகாராஷ்டிரா அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் போஸல் 24 ரன்னில் வெளியேறினாலும் கேப்டன் தனது அதிரடியை நிறுத்தவில்லை. தனது அதிரடியான ஆட்டத்தின் மூலமாக சர்வீசஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
ரோஹித் சர்மாவுக்கு உண்டாகும் தலைவலி
74 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 16 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் என 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 148 ரன்கள் குவித்து மகாராஷ்டிரா அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார். இவரது அதிரடியால் மகாராஷ்டிரா அணி 20.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலமாக 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கான தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். இவரது அதிரடி ஆட்டம் தற்போது தேர்வாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்திய அணியில் வருவதும் போவதுமாய் இருந்த ருதுராஜ் தனது மிகச் சிறந்த ஆட்டத்தின் மூலமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க:இருந்த கொஞ்ச நம்பிக்கையும் போச்சு.. பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள பெரிய தலைவலி.. காரணம் என்ன?. முழு விபரம்
இந்திய ஒரு நாள் அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோரே தொடக்க வீரர்களாக களம் இறங்கி வரும் நிலையில் மற்றொரு தொடக்க வீரரான ருத்ராஜ் தனது திறமையை நிரூபித்துள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டனுக்கு இது பெரிய அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது. மேலும் மற்றொரு வீரரான இஷான் கிஷான் ஜார்க்கண்ட் அணிக்காக வெறும் 78 பந்துகளில் 134 ரன்கள் குவித்து மணிப்பூர் அணியை வீழ்த்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது தற்போதைய பார்ம் ரோகித்துக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது