நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சீசேம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை அணியின் கேப்டன் ஷாருக் கான் அதிரடியில் அந்த அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற மதுரை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜே.சுரேஷ் குமார் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த முறை துவக்க இடத்தில் வந்த சாய் சுதர்சன் கொஞ்சம் பொறுப்பாக விளையாடி 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரிடம் இருந்து இன்னும் அதிரடியான ஆட்டம் வெளிப்படவில்லை.
இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வந்த முகிலேஷ் தன் பங்குக்கு 18 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த ஆறு பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை தொட முடியாமல் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன்கள் எடுத்தார்கள். மேல் வரிசையில் இருந்து ஓரளவுக்கு பங்களிப்பு வந்தாலும் கோவை அணி நெருக்கடியில் சிக்கியது.
இந்த நிலையில் கோவை அணியின் கேப்டன் ஷாருக் கான் தனி ஆளாக நின்று 26 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மட்டும் அடித்து, ஆனால் ஐந்து மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு 51 ரன்கள் எடுத்தார். கோவை அணி நிர்வகிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. மதுரை தரப்பில் அஜய் கிருஷ்ணா 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மதுரை அணிக்கு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த கேப்டன் ஹரி நிஷாந்த் ரங்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மூன்றாவது இடத்தில் வந்த ஜே.கௌசிக் 21 பந்தில் 27 ரன்கள், எட்டாவது இடத்தில் வந்த ஆர்.மிதுன் 22 பந்தில் 26 ரன்கள், ஒன்பதாவது இடத்தில் வந்த கார்த்திக் மணிகண்டன் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : தொடங்கிய 100 பந்து தொடர்.. நட்சத்திர வீரர்கள் கூட்டம்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விவரம்
இறுதியாக மதுரை அணி 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. கோவை அணி ரன்கள் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.கோவை அணியின் தரப்பில் பந்துவீச்சின் சிறப்பாக செயல்பட்ட கௌதம் தாமரைக்கண்ணன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.