நடப்பு எட்டாவது டிஎன்பிஎல் தொடரின் 11வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஷாருக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அனாயசமாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக் கான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜிம்பாப்வே தொடரில் இருந்து திரும்பிய சாய் சுதர்சன் லைக்கா கோவை கிங்ஸ் அணியில் இணைந்தார்.
முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து இளம் ஆல் ரவுண்டர் சோனு யாதவ் ஃபினிஷிங் இடத்தில் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். மிடில் வரிசையில் வந்த ஹரிஷ் 20 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.
நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. லைக்கா கோவை கிங்ஸ் பந்துவீச்சில் கேப்டன் ஷாருக் கான் நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் மட்டும் விட்டு தந்து இரண்டு முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். இவருடன் எம்.முகமது மூன்று ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த சாய் சுதர்சன் 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த டிக்கெட் சுரேஷ்குமார் மற்றும் பி.சச்சின் இருவரும் கூட்டணி அமைத்து நெல்லை ராயல் கிங்ஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள்.
இதையும் படிங்க : இந்தியா இலங்கை தொடரில் ட்விஸ்ட்.. புது அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ.. 4 போட்டிகள் மாற்றம்
தொடர்ந்து விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து இரண்டாவது விக்கெட்டுக்கு 98 பந்தில் 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பி.சச்சின் காயம் காரணமாக 48 பந்தில் 76 ரன்கள் எடுத்து வெளியேறினார். சுரேஷ்குமார் ஆட்டம் இழக்காமல் 55 பந்தில் 63 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் ஆட்டம் இழக்காமல் மூன்று பந்தில் 7 ரன்கள் எடுக்க, லைக்கா கோவை கிங்ஸ் அணி 17.3 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






