ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் சன்ரைசர்ஸ் அணி குறித்து லக்னோ அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சன்ரைசர்ஸ் லக்னோ மோதல்
ஐபிஎல் அணிகளை பொருத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலமான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி, அதிக ரன்கள் குவிக்கும் அணியாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் உள்ள அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட், ஹென்றிச் கிளாசன், நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்ட வீரர்கள் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள். அதேபோல இந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கு புதிதாக வாங்கப்பட்ட இசான் கிசான் மூன்றாவது வரிசையில் களமிறங்கி தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
எதிரணிகள் ஹைதராபாத் அணியை கண்டு சற்று பயப்படும் அளவிற்கு அந்த அணியின் பலமான பேட்டிங் வரிசை இருப்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 284 ரன்கள் குவித்தது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி குறித்து கவலைப்படாமல் தனது சொந்த திட்டங்களில் கவனம் செலுத்துவதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்று லக்னோ அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.
எங்களின் திட்டம் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆம் சன்ரைசர்ஸ் ஒரு சிறந்த அணியாக தெரிகிறார்கள். கடந்த சீசன் மற்றும் இந்த சீசன் முதல் ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் எங்கள் தரப்பை பொறுத்தவரை நான் எங்கள் மீதும் எங்கள் பலத்தின் மீது மட்டும் நம்பிக்கை செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் எங்கள் கிரிக்கெட்டை நாங்கள் விளையாட வேண்டும். மேலும் அவர்கள் எங்களை கடுமையாக எதிர்க்க போகிறார்கள் என்று நன்றாக தெரியும். முதல் பந்தில் இருந்தே கடுமையாக சென்று பந்த வீசும் அணிக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர் அணிகள் உலகில் அதிகம் இல்லை.
இதையும் படிங்க:ஐபிஎல் சில காலமா இப்படித்தான் இருக்கு.. அதனால எங்க பிளேயர்ஸ்க்கு இதை கத்துக்கணும் – ரகானே பேட்டி
நாளைய போட்டியில் அழுத்தம் இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் அந்த அழுத்தத்தை வரவேற்க வேண்டும். எங்களின் மிக முக்கிய விஷயம் எங்கள் பலம் மற்றும் எங்கள் விளையாட்டின் மீது கவனம் செலுத்தி விளையாட வேண்டும். சன்ரைசர்ஸ் அணி நிறைய அணிகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பெரும்பாலான மைதானங்களில் 230 என்பது சமநிலையான ஸ்கோராக மாறிவிட்டது. எனவே அதற்கு மதிப்பு கொடுத்து நாங்கள் விளையாட வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.






