நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 6வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்கியா ரகானே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை மிடில் வரிசை ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேல் 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் குவித்தார். கொல்கத்தா அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ரானா, மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கியது. கடந்த ஆட்டத்தில் குறைந்த ரன்னில் வெளியேறிய தொடக்க ஆட்டக்காரர் டிகாக் இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 61 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் வெற்றி பெற்ற விதம் குறித்துக் கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “முதலாவதாக நாங்கள் முதல் 6 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினோம். குறிப்பாக மிடில் ஓவர்களிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது வேலையை அற்புதமாக செய்தனர். மொயின் அலி இந்த ஆட்டத்தில் தனது வாய்ப்பைப் பெற்று சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். வீரர்கள் பயமின்றி விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்பும் ஒரு வடிவம் இது, அவர்கள் பயமின்றி சுதந்திரமாக விளையாட வேண்டும். எப்போதும் விக்கெட்டுகளை எடுக்கத் தேடிய பந்துவீச்சு பிரிவுக்கும், குறிப்பாக மொயினுக்கும் இந்த பெருமை சேரும்.
இதையும் படிங்க:2 தோல்வி.. நல்லா பாடம் கத்துக்கிட்டோம்.. சிஎஸ்கேக்கு திருப்பி தர ரெடியா இருக்கோம் – ரியான் பராக் பேட்டி
மொயின் அலி கடந்த காலங்களில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட ஒரு அற்புதமான வீரர். இந்த போட்டியில் அவரால் சிறப்பாக துவங்க முடியவில்லை. தற்போதைய தருணத்தில் இருப்பது தான் மிகப்பெரிய சவால். ஒவ்வொரு ஆட்டத்திலும் கற்றுக் கொண்டு விளையாட வேண்டும்” என்று ரகானே பேசி இருக்கிறார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 97 ரன்கள் எடுத்து சிறப்பாக உதவிய டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த கொல்கத்தா அணிக்கு இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தனது வெற்றிக் கணக்கை துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






