இஷான் கிஷன் – ரோகித் அபார துவக்கம்.. பினிஷ் செய்ய தவறிய குட்டி பொல்லார்ட்; மோசின் கானின் தரமான கடைசி ஓவரால் லக்னோ வெற்றி!

0
1449

டிம் டேவிட் – கிரீன் ஆகிய இரண்டு டேஞ்சர் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்தபோதும் கடைசி ஓவரில் 11 ரன்களை கட்டுப்படுத்தி லக்னோ அணிக்கு மிக முக்கிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார் மோசின் கான்.

லக்னோவில் நடைபெற்ற மிக முக்கியமான லீக் போட்டியில் லக்னா சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார் ரோகித் சர்மா.

- Advertisement -

லக்னோ அணிக்கு தீபக் ஹூடா மற்றும் டி காக் இருவரும் ஓபனிங் இறங்கினர். முதல் பந்தில் இருந்தே தடுமாறி வந்த தீபக் ஹூடா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே பிரேரக் மான்கட் டக் அவுட் ஆனார். பின்னர் டி காக் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 35 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாற்றம் கண்டது.

அடுத்து ஜோடி சேர்ந்த க்ருனால் பாண்டியா மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டிற்கு கிட்டத்தட்ட 80 ரன்களுக்கும் மேல் சேர்த்தது. நன்றாக விளையாடி வந்த க்ருனால் பாண்டியா காலில் வலி ஏற்பட்டதால் உள்ளே சென்றார். இவர் 49 ரன்கள் அடித்திருந்தார்.

நிக்கோலஸ் பூரான் உள்ளே வந்து நிதானமாக விளையாட, மறுபக்கம் ஸ்டாய்னிஸ் சிக்ஸர்கள் ஆக விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் உட்பட 89 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 20 ஓவர்களில் மூன்று விக்கெடுகள் மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது லக்னோ அணி.

- Advertisement -

இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஓப்பனிங் இறங்கிய இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகச்சிறந்த துவக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 9.4 ஓவர்களில் 90 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 37 ரன்களுக்கு அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து ஆட்டத்தை அதிரடியாக எடுத்துச் சென்ற இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். 39 பந்துகளில் 59 ரன்கள் அடித்து அவுட் ஆனார். 11 ஓவர்களுக்குள் 100 ரன்களைக் கடந்தது மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக ஆட்டத்தையும் முடித்து விடுவார்கள் என்றும் கருதப்பட்டது.

அப்போது சிறந்த பார்மில் இருந்த சூரியகுமார் யாதவ் 7 ரன்கள், நேஹல் வதேரா 16 ரன்கள் என இருவரின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்த லக்னோ அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது. அடுத்ததாக உள்ளே வந்த விஷ்ணு வினோத் இரண்டு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் பின்னர் ஜோடி சேர்ந்தனர். கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார். நோ-பால் பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என சொதப்பிய நவீன் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் லக்னோ அணியினர் மத்தியில் பதற்றம் நிலவியது.

கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என இருந்தபோது, இரண்டு பினிஷர்கள் இருக்கின்றனர் எளிதாக வெற்றியை உறுதி செய்வார்கள் என்று பலரும் எண்ணினர். கடைசி ஓவரை வீசிய மோஷன் கான், விக்கெட் எதுவும் எடுக்காமால் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி பேட்டில் படாமல் செய்தார்.

வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து லக்னோ அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 2 முக்கியமான புள்ளிகளை பெற்ற லக்னோ அணி, தற்போது புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டு, 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.

13 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தனது கடைசி லீக் போட்டியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் மற்றும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கும் மும்பை அணி தள்ளப்பட்டு இருக்கிறது.