ஈஸியா ஜெயிச்சிருக்க வேண்டிய போட்டியை நழுவவிட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்; பவுலிங்கில் பட்டையகிளப்பிய குஜராத் டைட்டன்ஸ் அணி த்ரில் வெற்றி!

0
637

19ஆவது ஓவர் வரை கையில் இருந்த ஆட்டத்தை 20ஆவது ஓவரில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து போட்டியையும் நழுவவிட்டது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி. இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. குஜராத் அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நன்றாக ஆடிக்கொடுத்த விருதிமன் சகா 37 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

- Advertisement -

அடுத்து வந்த அபிநவ் மனோகர், டேவிட் மில்லர் விஜய் சங்கர் ஆகியோர் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும், கடைசி ஓவர் வரை நின்று போராடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 50 பந்துகளில் 66 ரன்கள் விலாசி பேட்டிங்கில் மிக முக்கிய பங்களிப்பை கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

136 ரன்கள் என்னும் எளிய இலக்கு மற்றும் சொந்த மைதானத்தின் பலத்துடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. கேஎல் ராகுல் மற்றும் மேயர்ஸ் இருவரும் சேர்ந்து 55 ரன்கள் சேர்த்தனர்.

மேயர்ஸ் 24 ரன்கள் அடித்திருந்தபோது ரஷித் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா இரண்டாவது விக்கெட்டிற்கு கேஎல் ராகுலுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

க்ருனால் பாண்டியா 23 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 35 பந்துகளில் அரைசதம் கடந்தார். மிடில் ஓவர்களில் லக்னோ அணியினர் ரன்குவிக்கும் வேகம் வெகுவாக குறைந்தது.

கிட்டத்தட்ட 40 பந்துகளாக பவுண்டரிகள் கொடுக்காமல் பந்துவீச்சில் குஜராத் அணி அழுத்தம் கொடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, 19 ஆவது ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே லக்னோ அடித்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டபோது, மோகித் சர்மா இருபதாவது ஓவரை வீசினார். கேப்டன் கேஎல் ராகுல் களத்தில் நின்றார். முதல் பந்தில் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். இரண்டாவது பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது ஆட்டம் இழந்தார்.

மூன்றாவது பந்தில் ஸ்டாய்னிஸ் உள்ளே வந்தவுடன் ஆட்டமிழந்து வெளியேறியதால் கடைசி மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் ஹூடா இரண்டு ரன்கள் ஓடி எடுக்க முயற்சித்தபோது இரண்டாவது ரன் எடுக்கையில் ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தில் ஆயுஸ் பதோனி ரன் அவுட்டானார்.

கடைசி ஓவரில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே அடிப்பு 4 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

போட்டியை தன் வசம் வைத்திருந்த லக்னோ அணி, கடைசி நேரத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வெற்றியையும் கோட்டைவிட்டுள்ளது.