விராட் கோலி விக்கெட்டுக்கு எங்களோட பிளான் இதுதான்; அதன்பின் வேலை எளிதாகிவிட்டது – ஸ்காட் போலண்ட் பேட்டி!

0
307

விராட் கோலி விக்கெட்டை இப்படித்தான் பிளான் பண்ணி எடுத்தோம். அதன்பிறகு எங்களுக்கு வேலை எளிதாகிவிட்டது என ஸ்காட் போலண்ட் பேசியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டம் ஐந்தாம் நாள் வரை சென்றது. நான்காம் நாள் முடிவில் இந்திய அணி 164 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் விராட் கோலி 44 ரன்களுடனும் ரகானே 20 ரன்களுடனும் இருந்தனர்.

- Advertisement -

முதல் இன்னிங்சில் 173 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 270 அடித்து டிக்ளர் செய்தது. மொத்தமாக 443 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. 444 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்தி வந்தது. நான்காம் நாள் முடிவில் மீதம் 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 280 ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது.

இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் துவங்கியது. விராட் கோலி நிதானமாக விளையாடி சிங்கிள் எடுத்து வந்தார். இன்றைய தினம் ஐந்து ரன்களை மட்டுமே எடுத்திருந்த அவரை திட்டமிட்டு ஆஸ்திரேலியா அணி விக்கெட் வீழ்த்தியது. அதன் பிறகு ரகானே சிறிது நேரம் தாக்குப் பிடித்தார். அவரும் 46 ரன்களுக்கு அவுட் ஆனார். ஜடேஜா வந்து வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

விராட் கோலி, ஜடேஜா இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் தூக்கினார் ஸ்காட் போலண்ட். இந்த இடத்தில் தான் ஆட்டம் ஆஸ்திரேலிய அணி பக்கம் மாறியது. அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகள் சரியத் துவங்கின. இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டி சென்றது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் கூறுகையில், “பைனல் வரை வந்து 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி முழுவதும் ஒரே திட்டம்தான் எங்களுக்கு இருந்தது. சரியான லென்த் மற்றும் சரியான லைனில் பந்து வீசினோம்.

(விராட் கோலிக்கு எங்களது திட்டம் என்னவென்றால்) ஸ்டம்புக்கு ஆப் திசையில் சற்று பவுன்ஸ் இருந்தது அதை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த பார்த்தோம். சரியான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட் எடுத்தது நல்ல உணர்வை கொடுத்தது. ஸ்மித் அபாரமாக கேட்ச் பிடித்தார். அதேபோல் கேமரூன் கிரீன் சில கேட்ச்கள் பிடித்தது ஆட்டத்தை மாற்றியது.

போட்டி முழுவதும் சரியான நேரம், சரியான இடம் மற்றும் சரியான லைனில் பந்துவீசுகையில் விக்கெட் விழுந்தது, எங்களுக்கு தொடர்ந்து உத்வேகத்தை கொடுத்து வந்தது. இங்கு 12 வருடமாக விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறேன். ஆகையால் அங்கே கடினமாக உழைப்பை கொடுத்தது இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் நன்றாக செயல்பட முடிந்திருக்கிறது. அதேபோல் ஆஷஸ் தொடரில் என்னுடைய முழு பங்களிப்பை கொடுக்க காத்திருக்கிறேன்.” என்றார்.