சென்னை அணியில் கிடைத்திடாத வாய்ப்பு குஜராத் அணியில் கிடைத்துள்ளது – முடிவுக்கு வந்த சாய் கிஷோரின் நீண்ட வருட காத்திருப்பு

0
741

குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் கிடைத்த வெற்றியுடன் குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

நேற்றைய போட்டியில் 25 வயதான தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஸ்பின் பந்து வீச்சாளர் சாய் கிஷோர், குஜராத் அணியில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கி விளையாடினார்.

யார் இந்த ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர்

ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் 2017 ஆம் ஆண்டு தமிழக அணிக்காக விஜய் ஹசாரே டிராபி தொடரிலும், இரஞ்சி டிராபி தொடரிலும் விளையாட ஆரம்பித்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு ஜோனல் லெவல் டி20 தொடரிலும் விளையாட ஆரம்பித்தார்.

தமிழக அணிக்காக இதுவரை சாய் கிஷோர் 38 டி20 போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளையும், 33 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 54 விக்ககெட்டுகளையும், 20 பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் 59 விளையாடி விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார்.இந்திய அணியில் நெட் பவுலர் மற்றும் ஸ்டாண்ட் பை வீரராகவும் இவர் பங்கேற்றிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 20 லட்ச ரூபாய்க்கு இவரை கைப்பற்றியது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் சென்னை அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் ஒரு போட்டியில் கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

குஜராத் அணியில் தன்னுடைய முதல் போட்டியிலேயே அசத்திய சாய் கிஷோர்

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமின்றி நேற்று டீ காக் அடித்த பந்தை முன்பக்கமாக பாய்ந்து அற்புதமான கேட்ச் பிடித்து, அவருடைய விக்கெட்டையும் கைப்பற்ற காரணமாக இருந்தார்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த சாய் கிஷோர் நேற்று குஜராத் அணியில், தன் முதல் போட்டியிலேயே தனது முழு திறமையை வெளிப்படுத்தினார். தமிழக மாநிலத்தை பிரதிபலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்காமல் நீண்ட பசியோடு இருந்த சாய் கிஷோருக்கு, நேற்றைய போட்டி நல்ல விருந்தாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.