ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. வரலாற்று நிகழ்வாக கருதப்படும் இந்த தொடரைக்காண ரசிகர்கள் இடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டித் தொடர் இந்தியாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு விவரங்கள் குறித்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஸ்திரேலியா டி20 அணிக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக கலக்கிய அதிரடி இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜேக் பிரேசர் மெக்கார்க் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்க உள்ளார்.
அவரைத் தொடர்ந்து டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஜோஸ் இங்கிலீஷ் மற்றும் டிராவிஸ் ஹெட், மார்க்கஸ் ஸ்டானிஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். ரிச்சி பெரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளது. அந்த அணியிலும் கிராஸ் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
முதல் போட்டி நாளையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டி 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுவரை ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்த இரண்டு அணிகளும் மோதி வந்துள்ள நிலையில் தற்போது வரலாற்றில் முதல்முறையாக இருதரப்புத் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன. எனவே இது கிரிக்கெட் வரலாற்றில் நடைபெறும் முதல் நிகழ்வாக கருதப்படுகிறது.
முக்கிய போட்டித் தொடராக கருதப்படும் இந்த போட்டி தொடரை இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை. அதற்கு பதிலாக இணையதளத்தில் ஃபேன் கோடு ஆப் மூலமாக கண்டு களிக்கலாம். இந்த போட்டியில் அனைத்தும் எடின்பராவில் உள்ள சேன்ஜ் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிசிசிஐ மாஸ் பிளான்.. தேர்வுக்குழுவில் முன்னாள் இந்திய வீரர் சேர்ப்பு.. அகர்கர் குழுவின் முக்கிய நபர் நீக்கம்
சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முழு வீச்சில் தயாராக இருக்கும் என்பது எந்த சந்தேகமும் இல்லை. அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியும் சிறிய அணி என்ற பேதம் இன்றி கிரிக்கெட்டை முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் நோக்கில் தனக்குரிய பாணியுடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.