இந்த டீம் கூடவா தோத்தோம்.. 6 விக்கெட் 39 ரன்.. பங்களாதேஷை சுருட்டி வீசிய நியூசிலாந்து!

0
7791
Sodhi

இந்தியாவில் உலகக்கோப்பை துவங்க இருக்கும் நிலையில், பங்களாதேஷ் அணி ஆசியக் கோப்பையில் இரண்டாவது சுற்றில் வெளியேறி, தற்பொழுது உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இந்திய சூழ்நிலையில் ஓரளவுக்கு அதேபோல் இருக்கும் பங்களாதேஷ் நாட்டில் உலகக் கோப்பைக்கு முன்பாக விளையாடுவது நியூசிலாந்து அணிக்கு ஒரு சிறந்த பயிற்சியாகவும் இருக்கும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது போட்டி இரு அணிகளுக்கும் இடையே பரபரப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

நியூசிலாந்து அணிக்கு டாம் ப்ளூன்ட்டல் 68, ஹென்றி நிக்கோலஸ் 49, இறுதிக்கட்டத்தில் மெக்கன்சி 20, ஜெமிசன் 20, இஷ் சோதி 35 ரன்கள் என எடுக்க, 10 விக்கெட்டுகளையும் இழந்து 254 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் தரப்பில் காலித் அகமத் மற்றும் மெகதி ஹசன் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

பங்களாதேஷ் அணிக்குள் கேப்டன்சி தொடர்பாகப் பல பிரச்சினைகள் நிலவி வரும் இந்த நிலையில், இந்த இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்ட தமீம் இக்பால் 44 ரன்கள் எடுத்தார். தற்போதைய கேப்டன் லிட்டன் தாஸ் 6 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆசியக் கோப்பையில் இடம்பெறாத மூத்த வீரர் மகமதுல்லா ஆறாவது வீரராக வந்து 16 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணியில் யாரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. 41.1 ஓவரில் 168 ரன்களில் சுருண்டு பங்களாதேஷ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் அணியால் மன்கட் ரன் அவுட்டில் பெருந்தன்மையாக விட்டுத் தரப்பட்ட நியூசிலாந்தின் இஷ் சோதி பத்து ஓவர்களில் ஒரு மெய்டன், 39 ரன்கள் தந்து, ஆறு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே பங்களாதேஷ் அணியிடம் முக்கிய இந்திய அணி ஆசியக்கோப்பை தொடரில் இலங்கையில் வைத்து தோல்வி அடைந்திருந்தது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை பங்களாதேஷ் அணியை அதன் சொந்த நாட்டில் வீழ்த்துவது கடினமான விஷயமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த வெற்றி உலகக் கோப்பைக்கு முன்பாக நியூசிலாந்து அணிக்கு நல்ல நம்பிக்கையைக் கொடுக்கும்!