“ரோகித் கோலிக்கு திட்டங்களை தயாரா வச்சிருக்கோம்” – ஆப்கான் பயிற்சியாளர் முக்கிய பேச்சு!

0
67
Virat

சமீப காலத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் செயல்பாடு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியை விட சீனியர் அணிகளான இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளை விட ஆப்கானிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிக நன்றாக இருக்கிறது.

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தோற்கடித்து அரை இறுதிக்கான வாய்ப்பிலிருந்து கடைசி நேரத்தில் வெளியேறியது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் யூனிட் பாடம் நடத்தியது என்று கூறலாம்.

மேலும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு கூட்டணி உலக தரத்தில் அமைந்திருந்தது அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்தது. இதன் காரணமாக அவர்கள் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய எல்லா அணிகளுக்கும் சவால் கொடுத்தார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியின் திறமை சிறப்பாக இருந்த போதிலும், அவர்களின் மன நிலையை மிகச் சிறப்பாக மாற்றியதில் அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தின் ஜோனதன் டிராட்டுக்கு பெரிய பங்கு இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை, மிகச் சரியாக அவர் தன் வீரர்களுக்கு உணர்த்தி வழி நடத்தி இருந்தார்.

- Advertisement -

தற்போது முதல் முறையாக இந்தியாவிற்கு எதிராக இரு நாடுகளுக்கு இடையே ஆன வெள்ளைப்பந்து தொடரில் ஆப்கானிஸ்தான அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது.

இது குறித்து ஆப்கான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் கூறும்பொழுது “இந்தியா எப்படிப்பட்ட அணியைக் களம் இறக்கினாலும், அந்த அணி வலிமையானதாகத்தான் இருக்கும். அத்துடன் அவர்கள் ரோகித் மற்றும் விராட் கோலியை அணியில் சேர்த்து இருக்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளாக உலகத்தரமான வீரர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்த இடத்தில் ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ள சில வீரர்களை நாங்கள் பெற்று இருப்பதில் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம். எங்கள் அணியின் மற்ற வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்றவர்கள் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்த்து வந்திருக்கிறார்கள்.

எனவே அவர்களுக்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. அந்தத் திட்டங்களை நாங்கள் குறிப்பிட்ட நாளில் சரியாக செயல்படுத்துவதில்தான் எல்லாம் இருக்கிறது. இதைச் செய்வதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!