“இந்தியாவில் முதல் பந்தே ஸ்பின் ஆகட்டும்.. நாங்க புகார் சொல்ல மாட்டோம்” – இங்கிலாந்து வீரர் பேச்சு!

0
146
Pope

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி துவங்கி மார்ச் மாதம் கடைசிவரையில் நடக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் ஒட்டுமொத்தமாக இரண்டு பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் மெகா டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமான தொடராகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி கடைசியாக இந்தியாவில் 2012 ஆம் ஆண்டு அலைஸ்டர் குக் தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டும் வென்று இருக்கிறது.

பொதுவாகவே ஆசியாவுக்கு வெளியில் இருந்து வரும் எல்லா அணிகளுக்கும் இந்திய சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது மிக மிக கடினமான விஷயம். டெஸ்ட் போட்டியை வெல்வது டெஸ்ட் தொடரை வெல்வதற்கு சமமானது.

எனவே இதை மிக நன்கு உணர்ந்திருக்கும் இங்கிலாந்து அணி, இந்தத் தொடருக்காகவே இந்திய சூழ்நிலையை ஒத்திருக்கும் அபுதாபியில் ஒன்பது நாட்கள் கொண்ட பயிற்சி போட்டிக்கு திட்டமிட்டு இருக்கிறது. மேலும் இந்திய டெஸ்ட் ஆடுகளங்களை ஆசியாவுக்கு வெளியில் இருந்து வரும் அணிகள் குறை சொல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஒல்லி போப் “தொடர் குறித்து வெளியில் இருந்து நிறைய பேச்சுக்கள் இருக்கும். இந்திய ஆடுகளங்கள் முக்கியமான பேசு பொருளாக அமையும். ஆனால் நாங்கள் இரண்டு அணிகளும் ஒரே ஆடுகளத்தில்தான் விளையாடப் போகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாங்கள் எங்களால் முடிந்தவரை இந்திய சூழ்நிலைக்கு தகுந்தவாறு எங்களை பொருத்திக் கொள்ள வேண்டும்.

இங்கிலாந்தில் நாங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தில் புற்களை விட்டு வைப்போம். எனவே இந்தியாவும் தங்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளத்தை வைத்தால் தவறு எதுவும் கிடையாது. மேலும் குறைந்த ஸ்கோர் கொண்ட டெஸ்ட் போட்டிகளை பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கும்.

நான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அது அருமையாக இருந்தது மேலும் பந்து பறந்தது. இரு அணி வீரர்களும் ரன்கள் எடுக்க பெரிதும் கஷ்டப்பட்டார்கள். குறைந்த ஸ்கோர்கள் கொண்ட போட்டியாக அமைந்தது. இதே மாதிரிதான் இந்தியாவிலும் அமையும். ஆனால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு பதிலாக வந்து திரும்பும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். நாங்கள் இது குறித்து புகார் சொல்ல மாட்டோம். இதற்கு பதிலாக நாங்கள் அந்த சவாலுக்கு எங்களை தயார்படுத்திக் கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்!