“முதல்ல இருந்து சொல்றேன்.. NO.4 ஸ்ரேயாஸ் வேண்டாம்.. இவரை மாத்தி ஆட வைங்க!” – மிஸ்பா அழுத்தமான வலியுறுத்தல்!

0
2032
Misbha

இந்தியாவில் தற்பொழுது நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்திய அணிக்கு தற்பொழுது ஒரு பின்னடைவாக ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தது இருந்தது. ஆனால் அவருடைய காயத்தால் அணியில் ஏற்பட்ட இரண்டு மாற்றங்களில் முகமது சமி மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் வாய்ப்பு பெற்றார்கள்.

- Advertisement -

தற்பொழுது வாய்ப்பு பெற்ற இந்த இருவருமே மிகச் சிறப்பாக விளையாடுகின்ற காரணத்தினால் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியாவால் ஏற்பட்ட பின்னடைவும் தற்பொழுது இல்லை என்பதுதான் உண்மை.

ஆனால் இன்னொரு புதிய பிரச்சனை இந்திய அணிக்கு உருவாகி இருக்கிறது. அது ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ஷார்ட் பந்துகளில் தனது விக்கெட்டை பறி கொடுத்துக் கொண்டிருப்பது. இதன் காரணமாக நான்காவது பேட்டிங்கில் வரும் அவர் நிலைத்தன்மை அற்றவராக இருக்கிறார். இது அணிக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சிக்கலை உண்டு செய்து விடும். மேலும் உலகக் கோப்பை தொடரில் நாக் அவுட் போட்டிகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை மற்ற எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு பேட்டிங்கில் டெக்னிக் கொண்டிருக்கிறார். மத்திம ஓவர்களில் சுழற் பந்துவீச்சில் அவரால் ஸ்ட்ரைக்கை மிக நன்றாக ரொட்டேட் செய்ய முடியும். இதன் மூலம் அணிக்கு சீராக ரன்கள் கொண்டு வர முடியும்.

- Advertisement -

ஆனால் அவர் ஷார்ட் பந்துகளில் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். அப்படியான பந்துகளுக்கு அவர் பேட்டிங்கில் எந்த பதிலும் இல்லை. மிக குறிப்பாக அப்படியான பந்துகளை அவர் விடவும் செய்வதில்லை. இது ரசிகர்களை மிகவும் எரிச்சல் அடைய வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும் பொழுது ” நான் முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறேன். கேஎல்.ராகுல் மிகவும் தரமான வீரர். ஆனால் அவர் பேட்டிங்கில் மிகவும் தாமதமாக ஐந்தாவது இடத்தில் வருகிறார். அவர் நான்காவது இடத்தில் வரவேண்டும். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பி அவர் ஐந்தாவது இடத்தில் வந்தால், ஸ்ரேயாஸ் ஐயரின் இடம் கேள்விக்குறியாகி விடும்.

அவர் எப்பொழுதும் ஷார்ட் பந்துகளை எதிர்பார்க்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கத் தேவையே இல்லாத அப்படியான ஒரு பந்தை அடித்து ஆட்டம் இழந்தார். இப்படி எப்பொழுதும் அப்படியான பந்தை எதிர்பார்ப்பதால், அவருக்கு அது சிக்கல் ஆகி விடுகிறது.

அவர் முன் பாதத்தை எடுத்துக் கொண்டால் முதல் இயக்கத்திற்கு பிறகு அது அப்படியே இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட அந்தப் பந்தை விளையாட முடியாத பொசிஷனில் இருக்கிறார். மேலும் அந்தப் பந்தை விடுவதற்கு கூட அவர் முயற்சி செய்வதில்லை!” என்று கூறியிருக்கிறார்!