ஆசியகோப்பை இறுதிபோட்டிக்கு முன்னேற இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதுதான்!

0
91

இலங்கை அணி உடன் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகும் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தியாவிற்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது மட்டுமே

நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடர் நடப்பு சாம்பியன் அணியான இந்தியாவிற்கு சோதனையான தொடராக அமைந்திருக்கிறது. லீக் போட்டிகளில் இரண்டையும் வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் விளையாடியது. ஏற்கனவே ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 173 ரன்கள் எடுத்திருந்தது. மைதானம் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமானதாக காணப்படுகிறது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சற்று கூடுதல் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல் இலங்கை அணி முதல் ஓவரிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை திக்குமுக்காட செய்தது. கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் 19.5 வது ஓவரில் இலங்கை அணி இலக்கை கடந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கட்டாயமாக வென்றாக வேண்டும் என்று இருந்த இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அரிதாகி உள்ளது. ஆனாலும் இன்னும் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு மற்ற அணிகளை சார்ந்து இருக்கிறது. இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு பற்றி பார்ப்போம்.

- Advertisement -

அடுத்து வரும் சூப்பர் 4 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி வென்றுவிட்டால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகளுடன் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும். எளிதாக இறுதி போட்டிக்கு இந்த இரு அணிகளும் முன்னேறிவிடும். ஒருவேளை இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியாவிற்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது.

அடுத்ததாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் போட்டியில் இந்திய அணி நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். பின்னர் நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் இலங்கை அணி நல்ல ரன்ரேட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக நடந்தால், சூப்பர் 4 சுற்றின் இறுதியில் இலங்கை அணி மூன்று வெற்றிகளுடன் இருக்கும். மீதமுள்ள மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் காணப்படும். அச்சமயம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும் இந்தியாவை விட குறைந்த ரன்ரேட்டில் இருக்க வேண்டும். இந்திய அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இது மட்டுமே.

2016 மற்றும் 2018 ஆகிய இரண்டு முறையும் இந்திய அணி ஆசியகோப்பை தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. இம்முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே மிகவும் கடினமானதாக இந்திய அணிக்கு இருக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடைபெறும் மிகப்பெரிய தொடரில் இந்திய அணி இப்படி திணறுவது ஆரோக்கியமானதாக காணப்படவில்லை என்பதால் தவறுகளை விரைவில் சரி செய்துகொண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே பல கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.