“வின் பண்ணிட்டோம்; ஆனால்..” இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தொல்லையாக இருக்கு – ரோகித் சர்மா வருத்தம்!

0
460

கடைசி 5, 6 போட்டிகளாக இந்திய அணிக்கு இது மிகப் பெரிய கவலையாக இருக்கிறது என பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ரோகித் சர்மா.

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுடனான 2வது டி20 போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்திய அணிக்கு ஓபனிங் செய்ய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கி, முதல் ஓவரில் இருந்தே வெளுத்து வாங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 37(43) ரன்கள் எடுத்து அவுட்டானார். மிக அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 55(28) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்..

பின்னர் விராட் கோலி – சூரியகுமார் ஜோடி சேர்ந்தனர். 18 பந்துகளில் அரைசதம் அடித்து அணியின் ஸ்கொரை 200 மேலே விரைவாக எடுத்து சென்றார் சூரியகுமார் யாதவ். இவர் 61(22) ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். விராட்கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49(28) ரன்கள் எடுத்திருந்தார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் 17(7) ரன்கள் அடிக்க, 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா, ரூசோ ரன் அடிக்காமல் வெளியேறினார்கள். மார்க்ரம் 33 ரன்களில் அவுட் ஆனார். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக், டேவிட் மில்லர் ஜோடி முதலில் விக்கெட் விடாமல் நிதானம் காட்டினர். பிறகு அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இறுதியில் மில்லர் 46 பந்துகளில் 2வது டி20 சதத்தை அடித்தார். இன்னொரு முனையில் விளையாடிய குயின்டன் டி காக் 69(48) ரன்களை அடித்தார். இந்த ஜோடி மொத்தம் 174 ரன்கள் குவித்தது. இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “அனைவரும் ஒன்றாக வந்து இந்திய அணியிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் என கூறினார்கள். இது போன்ற ஆட்டம் எல்லா நேரங்களிலும் வராது. ஆனால் நாங்கள் இதைத்தான் விளையாட முயற்சிக்கிறோம். இந்திய அணியுடன் கடந்து 8 முதல் பத்து மாதங்களாக இணைந்து இது போன்ற ஒரு செயலை தான் செய்து முடிக்க முயற்சித்து வருகிறோம். இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் சிலருக்கு போதிய அனுபவம் இல்லை. ஆனாலும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

டெத் ஓவர்களில் சரியாக செயல்படவில்லை. கடந்த ஐந்து ஆறு போட்டிகளாக இந்திய அணிக்கு இது மிகப் பெரிய கவலையாக இருக்கிறது. அதே நேரம் எதிரணியும் இதுபோன்ற சிக்கலை சந்தித்து வருகின்றனர். ஆகையால தனிப்பட்ட அணியை கூறாமல் மைதானத்தின் போக்கையும் புரிந்து கொண்டு பேச வேண்டும். இருப்பினும் டெத் ஓவர்களில் தவறுகளை சரி செய்வதற்கு நாங்கள் சில முயற்சிகளை செய்து வருகிறோம்.

சூரியகுமார் யாதவ் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இனி வரும் போட்டிகளில் அவரை ஆட வைக்காமல் இருப்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நேரடியாக உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆட வைக்க திட்டமிட்டு இருக்கிறேன். அவரின் மனநிலையை நன்றாக வைத்துக் கொள்வதற்கு இந்த முயற்சிகளை மேற்கொள்ள நினைக்கிறேன்.” என்றார்.