இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெற உள்ள முதல் டி20 போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது குறித்தும், அவரின் மீதான எதிர்பார்ப்பு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
புதிதாக தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர், ரோகித் சர்மா டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமித்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு அடிக்கடி காயம் ஏற்படும் பிரச்சனை இருப்பதால் அவருக்கு கேப்டன் பதவி கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அறிவித்திருந்தது.
கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வெளியேறிய ஹர்திக் பாண்டியா, அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரின் போதே கலந்து கொண்டார். பின் டி20 உலக கோப்பையில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய இந்திய அணி உலக கோப்பையை வெல்லவும் முக்கிய பங்காற்றினார்.
இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா கேப்டன் பகுதியில் இருந்தும் விடுவித்து தற்போது ரிலாக்ஸாக இருப்பதால் அவரால் வெள்ளைப் பந்து மட்டுமல்லாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த முடியும் என்று இந்திய அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத் கூறியிருக்கிறார்.
இது குறித்து ராஜ் புத் விரிவாக கூறும்போது “பாண்டியாவை நான் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறேன். அவரால் மூன்று துறைகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடிந்தால் அது இந்திய அணிக்கு நல்ல விஷயமாக அமையும். ஒரு ஆல் ரவுண்டராக நம்பர் 6ல் களம் இறங்கி ஒன்று இரண்டு ஓவர்கள் பந்தும் வீச முடியும்.
ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் தேர்வு குழுவினர் பயிற்சியாளர் வகையில் கூட சிந்தித்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய நிர்வாகம் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறது. கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் தற்போது பாண்டியா சுதந்திரமாகவும் மற்றும் ஆல் ரவுண்டராகவும் சிறப்பாக செயல்பட முடியும்.
இதையும் படிங்க:பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு நாள் அந்த தோல்வி.. உடற்பயிற்சியே செய்ய தெரியல – ஹசன் அலி ஓபன் பேட்டி
அஜித் அகர்கரின் செய்தியாளர் சந்திப்பை கேள்விப்பட்டேன். பாண்டியாவின் உடல் தகுதி பற்றி பேசியிருக்கிறார். இந்திய அணிக்கு அனைத்து ஆட்டங்களிலும் விளையாடும் வகையில் ஒரு கேப்டன் தேவை. அதனால்தான் சூரியகுமார் யாதவியின் பக்கம் சாய்ந்து இருக்கிறது. சூர்யா ஆரம்பத்திலேயே டி20 ஃபார்மெட்டில் மும்பை ரஞ்சி அணிக்கு கேப்டனாகவும் இருந்து சிறப்பாக வழி நடத்தியுள்ளார்” என்று கூறியிருக்கிறார். லால்சந்த் 2007ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பை வென்ற போது இயக்குனராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.