குல்தீப், சிராஜ் இருவரிடம் சரணடைந்த பங்களாதேஷ் பேட்ஸ்மேன்கள்.. 150 ரன்களுக்குள் சுருண்டது!

0
1389

வங்கதேசம் அணியை 150 ரன்களுக்குள் சுருட்டி 254 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.

சிட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்கள் அடித்தனர். கடைசியில் வந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த குல்தீப் யாதவ் 40 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேசம் அணி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சு இரண்டிலும் திணறி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதிகபட்சமாக முஷ்பிக்குர் ரஹீம் 28 ரன்கள், மெஹதி ஹாசன் 25 ரன்கள், லிட்டன் தாஸ் 24 ரன்கள் என முக்கிய வீரர்கள் 30 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆட்டம் இழந்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க இரண்டாம் நாள் முடிவில் 133 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் அணி, மூன்றாம் நாள் காலை பேட்டிங் துவங்கிய ஒரு மணி நேரத்திற்குள் மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 254 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இரண்டாம் நாள் முடிவில் நான்கு விக்கெட் கைப்பற்றி இருந்த குல்தீப் யாதவ் இன்று தனது ஐந்தாவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். காயத்திலிருந்து மீண்டு வந்து இப்படி அபாரமாக செயல்பட்டு வந்த அவருக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இது அமைந்திருக்கிறது.

ஃபாலோ-ஆன் கொடுத்திருக்கலாம் ஆனால் இந்தியா அதை செய்யாமல் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் இந்த முடிவு சரியா? மிகப்பெரிய வெற்றி சாத்தியமாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.