அடுத்த போட்டியில் கே.எஸ்.பரத் இல்லை இஷான் கிஷான்? – ராகுல் டிராவிட் வெளிப்படையான பதில்!

0
412
Rahul Dravid

நான்கு போட்டிகள் கொண்ட இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தற்பொழுது நடந்து வருகிறது. இந்தத் தொடரில் மூன்று போட்டிகள் முடிந்திருக்க முதல் இரண்டு போட்டிகளை வென்ற இந்திய அணி மூன்றாவது போட்டியை தோற்று வெல்லும் வாய்ப்பை தற்காலிகமாக இழந்தது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தற்காலிகமாக இழந்தது.

இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் ஒரே ஒரு சதம் அடிக்கப்பட்டு இருக்கிறது, அந்த ஒரு சதமும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் அடித்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா வீரர்களான லபுசேன், ஸ்மித் பேட்டில் இருந்து இன்னும் ஒரு அரை சதம் கூட வரவில்லை.

- Advertisement -

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு கவாஜா இரண்டு அரை சதங்களும், ஹேண்ட்ஸ்கோம் ஒரு அரை சதமும் அடித்திருக்கிறார். இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருந்து புஜாரா மட்டுமே மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு அரை சதம் அடித்தார். இதைத் தவிர இந்தியா அணிக்கு அடிக்கப்பட்ட 3 அரை சதங்களில் இரண்டு அக்சர் பட்டேலும், ஒன்று ரவீந்திர ஜடேஜாவும் அடித்திருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களிடம் இருந்து இந்தியாவில் தொடர் நடைபெற்றும் சராசரியான ரன்கள் கூட வரவில்லை. விராட் கோலியின் பேட்டிங்கில் தடுமாற்றம் இல்லை என்றாலும், அவர் எதிர்பாராத நேரத்தில் விக்கட்டை பறிகொடுத்து விடுகிறார். புஜாராவின் ஆட்டம் மூன்றாவது டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில்தான் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. ஸ்ரேயாஸ், கே.எஸ்பரத் ஆகியோர் இன்னும் குறிப்பிடும்படி விளையாடவில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுலின் பேட்டிங்கும் மோசம். அவருக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்ற கில் ஷாட் தேர்வு அவுட் ஆன விதமும் மோசமாக இருந்தது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் இருந்து ரன்கள் ஏதும் பெரிதாக வராத காரணத்தால், கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சூரியகுமார் அணிக்குள் வர வேண்டுமா? விக்கெட் கீப்பர் கே எஸ் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷான் வர வேண்டுமா? என்ற விவாதங்கள் பெருகி உள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் கே எஸ் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷான் பற்றி செய்தியாளர்கள் பயிற்சியாளர் ராகுல் டிராவிடம் கேட்க, அதற்கு பதில் அளித்த அவர் ” நாங்கள் அவரது இடத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால் கே எஸ் பரத் பற்றி தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. பேட்டிங் செய்வதற்கு நிலைமைகள் கடினமாக இருந்த பொழுதும், அவர் பெரிய பங்களிப்பை தராவிட்டாலும் முதல் இன்னிங்ஸில் 17 ரன்கள் எடுத்தது நம்பிக்கை அளிக்கக் கூடியது! என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய ராகுல் டிராவிட் ” டெல்லி டெஸ்ட் போட்டியில் அவர் நேர்மறையாக விளையாட அவரிடம் இருந்து ஒரு பங்களிப்பு கிடைத்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆனால் அவருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவர் அணிக்காக தன்னை அழகாக வடிவமைத்து எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார்.
எனவே நாம் இதை வைத்து அவருடன் தொடர வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!