ஆர்சிபி-யை அசால்டாக சுருட்டி எறிந்து கொல்கத்தா கோலாகல வெற்றி!

0
85
Ipl2023

இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஐபிஎல் 16ஆவது சீசனின் ஒன்பதாவது போட்டி மிகவும் சுவாரசியமாக நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டியில் பெங்களூரு டாசை ஜெயிக்க, கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணியின் வெங்கடேஷ், மந்திப் சிங், கேப்டன் நிதிஷ் ரானா, ஆண்ட்ரூ ரசல் என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் ரன் எடுக்காமலும் வெளியேறினார்கள்.

- Advertisement -

கொல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஐந்து விக்கட்டுகளை இழந்து தத்தளித்த பொழுது, ரிங்கு சிங் உடன் ஆல் ரவுண்டர் சர்துல் தாக்கூர் கரம் கோர்த்தார். ஆரம்பத்தில் இருந்து அதிரடியில் மிரட்டிய அவர் ரிங்கு சிங் உடன் 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். கடைசி ஓவரில் ரிங்கு சிங் 33 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து அதே ஓவரில் அபாரமாக விளையாடிய சர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு முதல் நான்கு ஓவர்களில் 40 ரன்களுக்கு மேல் கிடைத்தது. ஆனால் ஐந்தாவது ஓவரை வீச வந்த சுனில் நரைன் விராட் கோலியை கிளீன் போல்ட் ஆக்கினார். இதேபோல் ஆறாவது ஓவரை வீச வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கேப்டன் பாப் டு பிளிஸசை கிளீன் போல்ட் ஆக்கினார். இவர்கள் இருவரும் முறையே 21 மற்றும் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து பெங்களூர் அணியின் விக்கட்டுகள் சடசடவென்று அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் கையில் விழுந்தது. பிரேஸ்வெல் 19 ரன்கள், மேக்ஸ்வெல் 5 ரன்கள், ஹர்சல் படேல் 0, ஷாபாஷ் அகமது 1 ரன், தினேஷ் கார்த்திக் 9 ரன், அனுஜ் ராவத் 1 ரன் , கரண் சர்மா 1 ரன், ஆகாஷ் தீப் 17 ரன்கள், டேவிட் வில்லி ஆட்டம் இழக்காமல் 20 ரன்கள் என எடுக்க, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 17.4 ஓவர்களில் 10 விக்கட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டும் எடுக்க, 81 ரன் வித்தியாசத்தில் தனது இரண்டாவது ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. பெங்களூர் அணிக்கு இரண்டாவது ஆட்டத்தில் இது முதல் தோல்வியாகும்!

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் மிகச் சிறப்பாக பதிவு செய்ய சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி 3.4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக இளம் இந்திய சுழற் பந்துவீச்சாளர் சுயாஸ் சர்மா நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகள் வீழ்த்தினார். சுனில் நரைன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 16 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.