கொல்கத்தா புதிய சாதனையுடன் 3வது முறை ஐபிஎல் சாம்பியன்.. 12 வருடம் கழித்து சேப்பாக்கத்தில் சம்பவம்

0
173
KKR

நடப்பு 17ஆவது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இறுதிப் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொல்கத்தா அணி அசத்தி இருக்கிறது!

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. ஹைதராபாத் அணியின் தைரியமான இந்த முடிவுக்கு ஏற்றபடி அந்த அணி வீரர்களின் பேட்டிங் அமையவில்லை. அபிஷேக் ஷர்மா இரண்டு ரன்களில் வெளியேற, டிராவிஸ் ஹெட் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 19 பந்தில் 24 ரன், எய்டன் மார்க்ரம் 23 பந்தில் 20 ரன், ஹென்றி கிளாசன் 17 பந்தில் 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரசல் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்த, ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள். ஐபிஎல் இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட மிகக் குறைவான ரன் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணிக்கு 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து சுனில் நரைன் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் அதிரடியில் மிரட்ட, கொல்கத்தா அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் குவித்தது.

இதற்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர் குர்பாஸ் 32 பந்தில் 39 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஆட்டம் இழக்காமல் வெங்கடேஷ் ஐயர் 26 பந்தில் 52 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3 பந்தில் 6 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 10.3 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இதையும் படிங்க : 17 வருட வரலாறு.. சுனில் நரைன் மெகா ரெக்கார்ட்.. இனி யாரும் செய்வதற்கு கடினமான சாதனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக 2012 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக கம்பீர் தலைமையில் கொல்கத்தா கோப்பையை கைப்பற்றியது. இதற்கு அடுத்து 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் கடைசியாக 2014 ஆம் ஆண்டு இரண்டாவது கோப்பையை பெற்ற அந்த அணி, பத்து ஆண்டுகள் கழித்து மூன்றாவது கோப்பையை வென்று இருக்கிறது. மேலும் மிகக் குறைந்த ஓவரில் முடிவுக்கு வந்த ஐபிஎல் இறுதிப் போட்டியாகவும் இது அமைந்திருக்கிறது.