இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு நேற்று நியூசிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தி தகுதி பெற்றது.
நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை பெற்றுத்தர, வழக்கம்போல் பேட்டிங்கை வழி நடத்திய விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 117 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை எட்டினார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்திருந்த சச்சின் சாதனையை அவர் முறியடித்தார்.
நேற்று இந்திய அணியின் வெற்றிக்கு என்ன முக்கியத்துவம் இருந்ததோ, அதே அளவுக்கு விராட் கோலி அடித்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் 50ஆவது சதத்திற்கும் இருந்தது.
சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது அவருடைய சத சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்றுதான் பலரும் நினைத்து இருந்தார்கள். ஆனால் அது வெகு சீக்கிரத்தில் விராட் கோலியால் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு உலகெங்கும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிக்கிறது.
இதுகுறித்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேசும்பொழுது “இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என நான் நினைக்கிறேன். சிலர் 50 போட்டிகள் விளையாடுகிறார்கள். ஆனால் விராட் கோலி 50 சதங்கள் அடித்து இருக்கிறார். உண்மையில் நான் இதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்.
இது உண்மையில் அவருடைய அணிக்கு ஆட்டங்களை வெல்வதைப் பற்றியது. அவர் நிறைய கவனம் செலுத்தி விளையாடுகிறார். அவரது செயல்பாடு எப்பொழுதுமே அணியை முன்னோக்கி தள்ளுவதாகவே இருக்கிறது. எனவே அவர் நிச்சயம் சிறந்தவர்.
அவர் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே வருகிறார். இது உலகெங்கிலும் உள்ள அவரது எதிரணிகளை கவலைப்படுத்தும் ஒன்றாகும். ஆனால் நாம் அதை பாராட்டுகிறோம். உண்மையில் இது நம்ப முடியாதது.
இன்று நான் அவருக்கு எதிர்ப்புறத்தில் இருப்பது கடினம் என்றாலும் கூட நான் இதை நினைத்துப் பார்க்கிறேன். நல்லவைகள் எப்பொழுதும் அதிக நேரம் எடுக்காது. நீங்கள் ஒரு மகத்துவத்தை போற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விராட் கோலி தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!