“கோலிக்கு பெரிய ஈகோ இருக்கு.. தேவைப்பட்டா அவரை சீண்ட வெட்கப்பட மாட்டேன்” – இங்கிலாந்து ராபின்சன் பேச்சு

0
108
Virat

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 7ஆம்தேதி இமாச்சல் பிரதேஷ் தர்மசாலா மைதானத்தில் துவங்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் முடிவடைகிறது.

நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் இரண்டு அணிகளுக்குமே இந்த மெகா டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாகும். இங்கிலாந்தின் அதிரடி டெஸ்ட் அணுகுமுறை இந்த முறை இந்தியாவில் எப்படி இருக்கும் என்கின்ற கூடுதல் எதிர்பார்ப்பும் தொடரின் மீது நிலவுகிறது.

- Advertisement -

பயிற்சியாளர் மெக்கலம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வித்தியாசமான திட்டங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகி இங்கிலாந்து தாண்டி தங்களின் டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு ரசிகர்களை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் என்ன மாதிரியான ஆட்ட அணுகுமுறையும், திட்டங்களையும் கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்பதற்கு மட்டுமே தனியாக இந்தத் தொடருக்காகக் காத்திருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மேலும் 40 வயதை தாண்டி வேகப்பந்துவீச்சாளராக இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடிக் கொண்டிருக்கும் அதிசய வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இதுவே கடைசி இந்திய சுற்றுப்பயணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. இதற்கு அடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் – விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் மோதலை களத்தில் நம்மால் பார்க்க முடியாது.

இப்படி இந்த தொடரை சுற்றி நிறைய விஷயங்கள் தொடரை சுவாரசியப்படுத்திய படி இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள், இந்த தொடரை காண்பதற்காகத் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த இந்திய சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு படையில் இடம்பெற்றுள்ள ஒல்லி ராபின்சன் விராட் கோலி பற்றி முக்கிய கருத்தை கூறியிருக்கிறார். இவர் 2021 ஆம் ஆண்டு இந்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலியை மூன்று முறை ஆட்டம் இழக்க செய்திருக்கிறார்.

- Advertisement -

இவர் விராட் கோலி குறித்து கூறும் பொழுது ” நீங்கள் எப்போதும் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாட விரும்புவீர்கள். அவர்களை நீங்கள் ஆட்டம் இழக்க செய்யவும் விரும்புவீர்கள். நீங்கள் விரும்பும் அப்படியான ஒரு வீரர் விராட் கோலி.

அவரிடம் பெரிய ஈகோ இருக்கிறது. அதிலிருந்துதான் அவர் விளையாடுவார். குறிப்பாக இந்தியாவில் விளையாடும் பொழுது அவர் ஆதிக்கம் செலுத்தி ரன்கள் குவிக்க நினைப்பார். கடந்த காலங்களில் நாங்கள் மோதி, உற்சாகமாக விளையாடி இருக்கிறோம். தேவைப்பட்டால் சில இடங்களில் அவரை ஸ்லெட்ஜிங் செய்ய நான் வெட்கப்பட போவதில்லை” என்று கூறியிருக்கிறார்.