விராட் கோலி தவிர வேறு யார் பேட்டிங் பண்ணீருந்தாலும், அன்னைக்கு டி20 உலகக்கோப்பைல ஜெயிச்சிருக்க முடியாது – மனம்திறந்து பாராட்டிய பாகிஸ்தான் ஜாம்பவான்!

0
1851

அன்று விராட் கோலியை தவிர வேறு பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்திருந்தால் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியிருப்பார்கள் என்று டி20 உலகக்கோப்பையில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு விராட் கோலியை பாராட்டியுள்ளார் மிஸ்பா உல் ஹக்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற டி20 உலககோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியதால் ரசிகர்கள் பேரதிர்ச்சியை அடைந்தனர். ஆனாலும் ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சி, விளையாடிய முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு சிறப்பாக வெற்றி பெற்றதுதான்.

- Advertisement -

160 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒருமுனையில் நின்றுகொண்ட விராட் கோலி, அபாரமாக விளையாடி நம்பிக்கை கொடுத்து வந்தார்.

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. குறிப்பாக கடைசி 8 பந்துகளில் 28 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டது. ஹாரிஸ் ராவ்ப் வீசிய 19ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை சிக்ஸர் அடித்தார் விராட்கோலி.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு இந்திய அணி வந்தது. அதிலும் ஒரு சிக்சர் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார் விராட்கோலி. விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன்களை அடித்திருந்தார்.

- Advertisement -

விராட் கோலி பல சதங்களை அடித்திருந்தாலும், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ் அதுதான் என்று பலரும் பாராட்டினர். இது நடந்து முடிந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் முடிவடைந்து விட்டன. இப்போதும் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் மற்றும் முன்னாள் பயிற்சியாளர் குறிப்பிட்டு பாராட்டி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

லெஜன்ட் லீக் கிரிக்கெட்டில் ஆசியா லயன் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், ஸ்போர்ட்ஸ் யாத்திரி என்னும் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

” விராட் கோலி, டி20 உலககோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது அசாத்தியமானது. அனைவராலும் அப்படி செய்திருக்க முடியாது. கடினமான சூழலில், ஆபத்தான பவுலரை எதிர்கொள்ளும்போது பேட்டிங் செய்வது மிகவும் கடினம்.

அந்த சூழலிலும் விடாமுயற்சி, மனதிடம் மற்றும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அனைத்தும் கொண்ட ஓரிரு வீரர்களால் மட்டுமே செய்து காட்டிட முடியும். அப்படிப்பட்ட வீரர் தான் விராட் கோலி. அந்த நேரத்தில் வேறு எந்த பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றிருக்கவே முடியாது. இதனால் தான் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார்.” என்று பாராட்டி பேசினார்.