கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ருத்துராஜ், அஸ்வின் சேர்ப்பு ; ரோஹித் & ஜடேஜாவுக்கு இடமில்லை – பல மாற்றங்களுடன் புதிய இந்திய அணி அறிவிப்பு

0
3099
Indian Team for SA ODI Series 2022

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் முடிந்த பின்பு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு எப்படியும் ரோகித் காயத்திலிருந்து மீண்டு வந்துவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில் அவரின் காயம் குணமாகாததால் இந்தத் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துவக்க வீரராக அனுபவ வீரர் தவான் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் இஷன் கிஷன் இடம் பிடித்துள்ளதால் ராகுல் துவக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் வைஸ் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு வேலைப் பளுவை மனதில் வைத்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் பந்துவீச்சாளர் அஸ்வின் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

மற்றபடி வழக்கம்போல விராத், சூரியகுமார், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் போன்றோர் அணியில் தனது இடத்தை தக்க வைத்துள்ளனர். புதுமுக வீரர்களாக உள்ளூர் போட்டிகளில் கலக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாடுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கும் அணியில் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்டியாவின் காயம் இன்னும் முற்றிலுமாக குணமாகாத காரணத்தினால் அவருக்கு பதிலாக கொல்கத்தா அணி வீரரான வெங்கடேஷுக்கு முதன்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோகித்துடன் ஜடேஜா மற்றும் அக்ஷர் ஆகியோரும் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ராகுல், தவான், கோலி, சூர்யகுமார், ருத்ராஜ், பண்ட், இஷன், வெங்கடேஷ், சஹால், ஸ்ரேயாஸ், அஷ்வின், சுந்தர், பும்ரா, புவனேஸ்வர், தீபக் சஹர், சர்தூல் தாகூர், ப்ரஷித், சிராஜ்.

- Advertisement -