வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவரை கடைசிவரை பாராட்டாமல் பேசிய கேஎல் ராகுல்.. கடுப்பான ரசிகர்கள் !

0
1726

இரண்டாவது டெஸ்டில் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அஸ்வினை போட்டி முடிந்த பிறகு துளியும் குறிப்பிடாமல் பேசியுள்ளார் கேஎல் ராகுல்.

வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்து. இதில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. மோமினுல் ஹக் 84 ரன்கள் அடிக்க, வங்கதேசம் அணி 227 ரன்கள் ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்திய அணிக்கு முதல் இன்னிங்சில் ரிஷப் பன்ட்(93) மற்றும் ஷ்ரேயாஸ்(87) இருவரும் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழக்க, இந்தியா 314 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா மூன்றாம் நாள் முடிவில் 42/4 என திணறியது. நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியா 74/7 என தடுமாறியபோது, அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் 29 ரன்களும் அடித்திருந்தனர். இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஆட்டநாயகனாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு சம்பிரதாயப்படி பேட்டி அளித்த கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், “வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் மிகவும் டென்ஷனாக இருந்தோம். பங்களாதேஷ் பவுலர்கள் மிகுந்த அழுத்தத்தை எங்கள் மீது செலுத்தினார்கள். ஆனால் எங்களுக்கு கடைசிவரை நம்பிக்கை இருந்தது. யாராவது ஒருவர் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று. ஏனெனில் அந்த அளவிற்கு அழுத்தம் நிறைந்த நிறைய போட்டிகளை விளையாடி வெற்றி பெற்றிருக்கிறோம்.

இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. குறிப்பாக புதிய பந்தில் பேட்டிங் செய்ய முடியவில்லை. பந்து இலகுவாக மாறிய பிறகு எளிதாக பேட்டிங் செய்ய முடிந்தது. இறுதியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணியின் பௌலிங் அட்டாக் வெளிநாடுகளில் எப்படி இருக்கும் என்பதை கடந்த சில வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த போட்டியிலும் சிறப்பாகவே இருந்தது. இந்த வெற்றியை மிகப்பெரிய வெற்றியாகவே கருதி நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.” என பேசினார்.

தனது பேட்டியில் இறுதிவரை அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் இரண்டு பேரை பற்றியும் கேஎல் ராகுல் பேசவில்லை. குறிப்பாக அஸ்வின் 8வது வீரராக களமிறங்கி இத்தகைய சிறப்பான வெற்றியை இந்திய அணிக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அவர் சிறிது தவறு செய்திருந்தாலும் போட்டி அப்படியே தலைகீழாக மாறி வங்கதேசம் அணிக்கு சாதகமாக மாறி இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நன்றாக விளையாடிய அவரைப் பற்றி ஏன் கேஎல் ராகுல் பேசவில்லை என்று ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். தொடர்ந்து ட்விட்டர் பக்கத்திலும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.