காட்டுக்கே ராஜா கிங் கோலி.. 40 மாதங்களுக்கு பிறகு சதமடித்து அசத்தல்!

0
289

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு, மீண்டும் சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட் கோலி. சுமார் 40 மாதங்களுக்கு பிறகு சதம் அடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்தது.

- Advertisement -

ஆனாலும் அசராத இந்திய அணிக்கு சுப்மன் கில் ஒரு முனையில் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் ரோகித் சர்மா 35 ரன்கள், புஜாரா 42 ரன்கள் அடித்து நல்ல பாட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். அபாரமாக விளையாடிய சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து கிட்டத்தட்ட 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஜடேஜா, விராட் கோலி பேட்டிங்கில் இருந்தனர்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ஜடேஜா இருவரும் களமிறங்கினர். அரைசதம் கடந்திருந்த விராட் கோலி கூடுதல் பொறுப்புடன் விளையாடி வந்தார். துவக்கம் முதலே அதிரடியாக அடிக்க ஆரம்பித்த ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த கேஎஸ் பரத் விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, 5வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். கேஎஸ் பரத் 44 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

ஆனாலும் அசராத விராட் கோலி சுமார் 40 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் அரங்கில் சதம் அடித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவர் அடிக்கும் 28வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்தமாக 75 ஆவது சதம் ஆகும்.

சுமார் 1205 நாட்களுக்குப் பிறகு இவர் சதம் அடித்திருப்பதால், ரசிகர்கள மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதேநேரம் இந்திய அணியும் முதல் இன்னிங்சில் வலுவான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

களத்தில் விராட் கோலி மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 420 ரன்கள் அடித்திருக்கும் இந்திய அணி, 60 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.