கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

தோனி இல்லை.. எனக்கு உதவியது இந்த முன்னாள் சிஎஸ்கே வீரர் தான்.. கலீல் அகமது நெகிழ்ச்சி

இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தனது ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப் பிறகு இர்ஃபான் பதான் தனக்கு பெரிதும் உதவியதாக தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் நிரந்தர இடத்தைப் பிடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக கூறியுள்ள கலீல் அகமது, இதுவரை இந்திய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகளிலும், 18 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய கலீல் அகமது, “அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது, நடப்பது எப்படி என்பதை கற்பது உட்பட. இர்ஃபான் பாய் என்னுடன் நிறைய நேரம் செலவிட்டார். பந்தின் சீமை நேராக வைத்திருப்பது எப்படி என்பதை அவர் எனக்குக் காட்டினார். மேலும் எனது திறமைகளை மேம்படுத்தவும் உதவினார்.”

2 பேரும் உதவினார்கள்:

“அவரும் ஜாகீர் பாயும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் எப்படி சிறப்பாக செயல்படலாம் என்று ஆலோசனை வழங்கினர். அவர்களை எப்போது வேண்டுமானாலும் பேசி தொடர்பு கொள்ள முடிந்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி மற்றும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.நான் எனது உடற்தகுதிக்கு நிறைய கவனம் செலுத்தினேன். பந்தை தாமதமாக ஸ்விங் செய்வது போன்ற சில திறமைகளையும் கற்க முயற்சித்தேன்.”

“வெற்றிகரமாக இருப்பதற்கு வழிகளைப் பயிற்சி செய்தேன். நீங்கள் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடும்போது, கவனிக்க வேண்டிய சிறிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒரு இன்னிங்ஸில் 20-25 ஓவர்கள் வீசுவதற்கு உங்கள் உடலைத் தயார்படுத்த வேண்டும். பின்னர் பயணங்களை நிர்வகிப்பது போன்ற விஷயங்கள் உள்ளன.”

- Advertisement -

“ஒரு வேகப்பந்து வீச்சாளராக, நான் தினமும் எனது உடலைப் பராமரிக்க வேண்டும். உரிய நேரத்தில் தூங்குவது மற்றும் உடல் தகுதியை மீட்கும் பணிபோன்றவை மிகவும் முக்கியம். கவனச்சிதறல்கள் ஏற்படலாம், ஆனால் இந்த அடிப்படை விஷயங்களை எல்லாம் செய்ய வேண்டும். நான் நிறைய பொறுமையுடன் பணியாற்றி வருகிறேன்.”

நாட்டுக்கு சேவை செய்யனும்:

“எனது வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும். ஐபிஎல்-ல் செயல்திறனை மக்கள் எளிதாக மறந்துவிடுவார்கள்.ஆனால் நாட்டுக்காக நீங்கள் செய்யும் செயல்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். நான் சர்வதேச அளவில் இருக்க விரும்புகிறேன். அதற்காக நான் எல்லாவற்றையும் கொடுத்து வருகிறேன்.”

“வேறு எதற்கும் எனக்கு நேரமில்லை. இதுதான் எனது தற்போதைய கவனம். மனரீதியாக கடினமான காலங்களை எதிர்கொண்டேன். ஆனால் இப்போது, நான் அனுபவம் பெற்ற ஒரு கட்டத்தில் இருக்கிறேன். வாழ்க்கையில் நன்றாக இருக்கிறேன் என்று உணர்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக, நான் மிகவும் முதிர்ச்சியடைந்தவனாக உணர்கிறேன்.”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு இது மட்டும் தான் தெரியும்னு யாரு சொன்னா? விவாதங்களுக்கு முடிவு கட்டிய பயிற்சியாளர்

“வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன், நான் அதைச் செய்வேன். இதுதான் மிச்சமிருக்கிறது,” என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார். கலீல் கடைசியாக 2024 ஜூலையில் இந்தியாவுக்காக விளையாடினார். 27 வயதான இவர் இன்னும் சர்வதேச அளவில் டெஸ்ட் அறிமுகம் ஆகவில்லை. கலீல் சென்ட்ரல் ஜோன் அணியின் விளையாடுகிறார். 2025 துலீப் டிராஃபியின் காலிறுதியில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by