இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு பயிற்சியாளர் கம்பீர் எப்படி ஒரு முக்கியமான காரணமாக இருந்தார் என்பது குறித்து கருண் நாயர் பேசியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என சமன் செய்தது. இளம் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இதற்குப் பின்னணியில் கம்பீர் உருவாக்கிய கலாச்சாரம் காரணமாக இருப்பதாக கருண் நாயர் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி கைப்பற்றியது. ஆனால் அதற்கு முன்பும் பின்பும் ஆக சிவப்பு பந்து மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வரலாற்று தோல்விகளை இந்திய அணி அவரது பயிற்சியில் சந்தித்தது.
மிகக்குறிப்பாக கம்பீர் பயிற்சியில் இந்திய டெஸ்ட் அணி வரலாற்று தோல்வியை உள்நாட்டில் சந்தித்து, ஆஸ்திரேலிய மண்ணில் மேலும் தோல்வியை சந்தித்து மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் கம்பீருக்கு பயிற்சியாளராக மிக முக்கியமானதாக அமைந்தது.
இது குறித்து கருண் நாயர் பேசும் பொழுது “கம்பீர் பாய் எங்களுக்கு நிறைய ஊக்கத்தையும் ஆதரவையும் கொடுத்தார். அவர் எனக்கு வெளியே சென்று சிறந்ததை கொடுப்பதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். எனக்குத் தெரிந்த வழியில் சிறப்பாக செயல்படுவதற்கு என்னை அனுமதித்தார். அது நான் எந்த சூழ்நிலையில் இருந்த போதும் அணிக்காக விளையாடுவதை பற்றியதாக இருந்தது”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025: இந்திய அணி தேர்வுக்கான தேதி வெளியானது.. 2 ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வு வழங்க திட்டம்
“முதல் நாளிலே எங்களுக்கு ஒரு செய்தி கம்பீரிடம் இருந்து தெளிவாக வந்தது. அது அணியை முதன்மைப்படுத்தி இங்கிலாந்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெறுவதைப் பற்றியதாக இருந்தது. மிக முக்கியமாக ஒரு அணியாக இணைந்து சிறப்பாக ஏதாவது செய்து வெற்றி பெறுவதாகும். அவர் முதல் நாளில் எங்களுக்கு இதைச் சொன்ன பொழுது அதை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டோம். அந்த தொடர் தொடர்ந்து நடந்த பொழுது நீங்கள் இதை கவனித்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.