முதல் ஓவரில் ஹாட்ரிக்; இரண்டே ஓவரில் 5 விக்கெட்டுகள்.. ரஞ்சிக்கோப்பையில் மிரட்டிய ஜெயதேவ் உனட்கட்!

0
3626

ரஞ்சிக்கோப்பை போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார் ஜெயதேவ் உனட்கட்.

ரஞ்சிக்கோப்பை 2022-23 சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எலைட் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டெல்லி, சவுராஷ்டிரா அணிகள் இன்று மோதுகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன், 20 வயதேயான யாஷ் துல் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். சவுராஷ்டிரா அணிக்கு ஜெயதேவ் உனட்கட் மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடுகிறார்.

பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கடைசியாக 2010ம் ஆண்டு சவுத் ஆப்ரிக்கா அணியுடன் நடந்த தொடரில் விளையாடினார். அதன்பிறகு இப்போதுதான் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்டில் நன்றாக செயல்பட்டபின்பு, மீண்டும் ரஞ்சிக்கோப்பை தொடருக்கு புதிய உத்வேகத்துடன் திரும்பியுள்ளார். கேப்டனாகவும் செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிலவியது.

டெல்லி அணிக்கு எதிராக முதல் ஓவர் வீசிய உனட்கட், 3வது ஓவரில் துருவ் ஷோரெ விக்கெட்டை போல்டாக்கினார். 4வது பந்தில் வைபவ் ராவல் விக்கெட்டை வீழ்த்தினார். 5வது பந்தில் கேப்டன் யாஷ் துல் விக்கெட்டை வீழ்த்தி, ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஆக்கினார்.

இதன் மூலம் ரஞ்சிக்கோப்பை வரலாற்றில், போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்கிற புதிய சாதனை படைத்தார். சர்வதேச போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இர்பான் பதான் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இரண்டாவது ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகளையும் உனட்கட் கைப்பற்றினார். 2 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

போட்டியின் முதல் ஓவரில் ஹாட்ரிக், தனது 2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் ஹால் என புதிய வரலாறு படைத்துள்ள ஜெயதேவ் உனட்கட்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

9 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெறும் 26 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது டெல்லி அணி. இதில் 5 வீரர்கள் டக்-அவுட் ஆகியுள்ளனர். உனட்கட் தற்போது வரை 6 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.