2வது போட்டியில் கோலி பங்கேற்பாரா ? விராட் கோலியின் காயம் குறித்து பும்ரா தகவல்

0
49
Jasprit Bumrah about Virat Kohli

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்க, விராட் கோலி இரண்டு இன்னிங்சிலும் இருபது ரன்னை தாண்டவில்லை. இதையடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இரண்டாவது மூன்றாவது போட்டிகளில் விளையாடிய அவர் எடுத்தது மொத்தம் 12 ரன்கள்தான்.

இதையடுத்து நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. இதுகுறித்துத் தெரிவித்த பி.சி.சி.ஐ “இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி, அர்ஷ்தீப் சிங் இருவரது பெயர்களும் பரிசீலிக்கப்படவில்லை. விராட் கோலிக்கு இடுப்பிலும், அர்ஷ்தீப் சிங்கின்கு வலது வயிற்றுப் பகுதியில் வலியும் இருக்கிறது. பி.சி.சி.ஐ-ன் மருத்துவக்குழு அவர்களைத் தீவிரமாய் கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தது.

நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 110 ரன்களில் 25.2 ஓவர்களில் சுருண்டது. இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாய் பந்துவீசினார்கள். பும்ரா ஆறு விக்கெட்டுகளையும், ஷமி மூன்று விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

அடுத்து 111 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் 18.4 ஓவர்களில் வென்றது. கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்களையும், ஷிகர் தவான் 31 ரன்களும் எடுத்தனர். ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்ப்ரீட் பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மேலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா டிரென்ட் போல்ட் இடம் இருந்து 730 நாட்கள் கழித்து ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தார். 76 ரன்கள் அடித்த ரோகித் சர்மா விராட் கோலியின் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். 31 ரன்கள் அடித்த ஷிகர் தவான் 12ஆம் இடத்திற்கு முன்னேறினார்.

நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜஸ்ப்ரீட் பும்ராவிடம் விராட் கோலியின் காயம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பும்ரா “கடைசி மூன்றாவது டி20 போட்டியில் நான் விளையாடாத காரணத்தால் விராட் கோலியின் காயம் பற்றியும், காயத்தின் தன்மை பற்றியும் எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்!