ஜெய்ஸ்வால் அப்பா பானி பூரி விற்றதே இல்லை… எதுக்கு கதை அளக்குறீங்க… உண்மையை உடைத்த ஜெய்ஸ்வால் பயிற்சியாளர்

0
3159

இந்திய கிரிக்கெட் அணியில் புதிய நட்சத்திரமாக உருவாகி இருப்பவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக களம் இறங்கிய இவர் தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் எடுத்து 171 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இந்தியா அணிக்காக அண்டர் 19 விளையாடும் காலங்களிலேயே மிகச் சிறப்பான பேட்ஸ்மனாக வருவார் என்று கணிக்கப்பட்ட ஜெய்ஸ்வால் தனக்கு கிடைக்கப்பட்ட முதல் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி தனது சர்வதேச கிரிக்கெட்டிற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்திருக்கிறார்.

- Advertisement -

ரஞ்சி டிராபி போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றாலும் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. 14 போட்டிகளில் ஆடிய இவர் 625 ரன்கள் எடுத்தார். இதில் 5 அரை சதங்களும் 1 சதமும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியிலும் தேர்வானார். ஜெய்ஸ்வால் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் அவர் இளம் வயதில் பாணி பூரி விற்றதாக சமூக வலைதளங்களிலும் செய்த இணையதளங்களிலும் ஒரு செய்தி பரவி வருகிறது. இதனை யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜுவாலா சிங் மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ரிபப்ளிக் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர்” நான் இங்கிலாந்தில் இருந்த போது சில பத்திரிகையாளர்கள் ஜெய்ஸ்வாலை பேட்டி எடுக்க வந்தனர். அப்போது என்னை தொடர்பு கொண்ட ஜெய்ஸ்வால் சில பத்திரிகையாளர்கள் தன்னிடம் பேட்டி எடுக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அதற்கு அனுமதி அளித்தேன். அப்போது அவருக்கு 16 வயது தான் இருக்கும். அந்த நேரத்தில் அவர் குழந்தைத்தனமாக கூறிய விஷயங்களை பெரிதுபடுத்தி தலைப்புச் செய்தி ஆக்கிவிட்டார்கள் . அந்த செய்திகளில் வரும் ஐந்து சதவீதமே” உண்மை இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் “யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பைக்கு கிரிக்கெட் விளையாட வந்த போது மைதானத்தின் கூடாரங்களில் தங்கி இருந்தது உண்மைதான் அங்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை. மின்சாரம் கூட கிடையாது என்பதும் உண்மைதான். அந்தக் காலகட்டங்களில் அவர் ஒரு சில நாட்கள் பானி பூரி கடையில் வேலை செய்தார் . ஆனால் நான் இன்று அவருக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறேன். மேலும் ஜெய்ஸ்வாலின் பேட்டியில் அவருடன் இருக்கும் ஒரு நபர் அவரது தந்தை என்றும் செய்திகள் பரவி வருகிறது அதுவும் பொய். அவரது தந்தை பாணி பூரி விற்கவில்லை ஒரு சிறிய பெயிண்ட் கடை வைத்திருக்கிறார்” என தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பேசிய ஜுவாலா சிங்” ஒரு கிரிக்கெட் வீரரால் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிறந்த வீரராக உருவாக முடியாது.யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆரம்பம் முதலே தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறேன். மேலும் அவரது பெற்றோர் மாதம் ஆயிரம் ரூபாய் அவரது செலவுக்காக அனுப்பி வைப்பார்கள். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னுடைய 9 வருடங்களை அவருக்காக செலவழித்து இருக்கிறேன். 13 வயதில் என்னிடம் வந்த அவர் இன்று ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக திகழ்கிறார். நானும் பலரிடமும் கூறிவிட்டேன் அவர் இதைப் பற்றி வரும் கதைகள் அனைத்தும் பொய் அதை யாரும் நம்பாதீர்கள் என்று. ஆனாலும் தொடர்ந்து அதையே பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டினார்.