ரவீந்திர ஜடேஜா முழங்கால் காயத்தால் ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறுகிறார்; மாற்று வீரர் அறிவிப்பு!

0
311
Jadeja

தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், பாகிஸ்தான் அணியுடனான போட்டியின்போது விமான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர் ரவீந்திர ஜடேஜா முழங்கால் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் குறைக்கப்பட்டு ஒரு சுழற்பந்து வீச்சாளர் அதிகமாய் சேர்க்கப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

- Advertisement -

இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடந்தபோது அப்பொழுதும் முழங்கால் காயத்தின் காரணமாக ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை. மேலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இதற்காக அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் அணியில் இடதுகை பேட்ஸ்மேன் ஆக ஜடேஜாவை மட்டும்தான் உள்ளே வைக்க முடிந்தது. ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்தான் அணியில் இடம் பெற்றார். இதனால் ரவீந்திர ஜடேஜா அணியில் இருப்பது முக்கியத்துவமான ஒன்றாக கருதப்பட்டது. இந்த நிலையில் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து காயத்தால் வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு பின்னடைவை தான் கொடுக்கும்.

சமீப காலங்களில் அவரது பேட்டிங் மிகவும் முதிர்ச்சி அடைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் அவரது பீல்டிங் மிகவும் உலகத்தரமான ஒன்று. ஹாங்காங் அணியுடனான போட்டியின்போது 4 ஓவர் பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு மிகச்சிறப்பான ரன் அவுட்டை தனியாக செய்தார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா தற்போது காயத்தால் தொடரை விட்டு வெளியேறி இருப்பதால் அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட, இந்த ஆசிய கோப்பை தொடருக்கு ரிசர்வ் வீரராக வைக்கப்பட்ட அக்சர் படேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தற்போதைய இந்திய அணியில் எல்லா வீரர்களுக்கும் சரியான மாற்று வீரர்கள் இருப்பதால் காயங்கள் பெரிய அளவில் அணியை பாதிக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவின் விலகல் இந்தத் தொடரில் ஒரு சிறிய அளவிலான பாதிப்பை உருவாக்கவே செய்யும்!