இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களுக்குள்ளேயே இந்திய அணி இலங்கையை மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. நிரந்தர கேப்டனாக ரோகித் பதவி ஏற்கும் முதல் போட்டி மற்றும் விராட் கோலியின் 100-வது போட்டி என்று டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த போட்டி குறித்து பல எதிர்பார்ப்புகள் இருந்தன. நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடி இந்த டெஸ்ட் போட்டியை வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மிகவும் சிறப்பாக விளையாடினார். இந்தியா விளையாடிய முதல் இன்னிங்ஸில் இவர் 175 ரன்கள் எடுத்தார். 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை இவர் விளாச இந்திய அணி 574 ரன்கள் எடுத்தது. பந்து வீச்சிலும் மிகவும் சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் 20 விக்கெட்டுகளில் இவர் தனி ஒருவராக 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டிக்கு பிறகு கபில் தேவுக்கு பிறகு 5000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் என இரண்டையும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒருசேரப் பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் விளைவாக ஆல்ரவுண்டருக்கான ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஜடேஜா. இரண்டாவது இடத்தில் ஹோல்டரும் மூன்றாவது இடத்தில் இந்தியாவின் அஸ்வினும் உள்ளனர். அதே போல நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 45 ரன்கள் எடுத்ததால் விராட் கோலி பேட்டிங் வீரர்களுக்கான தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருந்து ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரோகித் 6வது இடத்தில் உள்ளார். சரியாக விளையாடவில்லை என்று அவரது ரசிகர்களே அங்கலாய்த்துக் கொண்டிருந்தாலும் ஆசியாவிலேயே முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் டெஸ்ட் வீரர் கோலி தான்.
பந்துவீச்சாளர்களுக்கு ஆனால் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் முதலிடத்திலும் இந்திய வீரர் அஸ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். வேறு எந்த இந்திய பந்துவீச்சாளர் முதல் 10 இடங்களுக்குள் இல்லை. ஒருகாலத்தில் முதலிடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 5வது இடத்தில் உள்ளார். வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றுவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.