“நான் ஏற்கனவே ஒரு வீரரை இழந்தவன்; பீட்டர்சன் பேசியது மோசமானது” – கொதித்துப் போன நாதன் லயன்!

0
316
Lyon

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரின் இரண்டாவது போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

நான்கு நாட்கள் நடந்து முடிந்திருக்கும் இந்த போட்டியில் தற்பொழுது இங்கிலாந்து கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கிறது வெல்வதற்கு 257 ரன்கள் வேண்டும் என்கின்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது!

- Advertisement -

இங்கிலாந்தில் வைத்து நடந்த கடைசி ஆசஸ் டெஸ்ட் தொடரில் இதே மாதிரியான ஒரு சூழ்நிலையில் கடைசி விக்கட்டை கையில் வைத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் அற்புதமான விளையாடி வெற்றி பெற்று கொடுத்திருப்பார். தற்போதைய போட்டியிலும் அவர் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சிறப்போடு ஆஸ்திரேலியா சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் களமிறங்கினார். அவர் பந்துவீச்சின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் க்ரவ்லி விக்கட்டையும் வீழ்த்தினார்.

மேலும் தொடர்ந்து அவர் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது அவரது காலில் தசைப்பிடிப்பு மாதிரி ஏற்பட அவர் மைதானத்தை விட்டு நடக்க முடியாமல் மருத்துவர் உதவியுடன் வெளியேறினார். நேற்று போட்டியின் நான்காவது நாளுக்கு அவர் ஊன்றுகோலுடன் மைதானத்திற்கு வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி எதிர்பார்த்ததைவிட விக்கெட்டுகளை கொஞ்சம் சீக்கிரம் இழந்து விட, தன்னால் முடியாத சூழ்நிலையிலும் பதினோராவது பேட்ஸ்மேனாக நாதன் லயன் களமிறங்கினார். அவர் 13 பந்துகளை சந்தித்து நான்கு ரன்கள் எடுத்தார். கடைசி விக்கெட்டுக்கு 15 ரன்கள் கிடைத்தது.

நாதன் லயன் இப்படி பேட்டிங் செய்ய வந்த பொழுது கமெண்டரியில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் “கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இப்பொழுது நாதன் லயனுக்கு தலையில் அடிபட்டு, அவருக்கு பதிலாக இந்தியாவில் மிகச் சிறப்பாக சுழற் பந்துவீச்சில் செயல்பட்டு இருந்த டாட் மர்பி வருவதாக இருந்தால் எப்படி இருக்கும்?!” என்று கூறியிருந்தார்.

நேற்று போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து நாதன் லயனிடம் கேட்ட பொழுது ” நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன். நான் எனது சக ஆட்டக்காரரை (பில் ஹியூக்ஸ்) தலையில் அடிபட்ட காரணத்தால் இழந்திருக்கிறேன். நான் உங்களிடம் நேர்மையாக இருப்பதாக இருந்தால், உண்மையில் இது மிக மோசமான கருத்து.

நான் பேட்டிங் செய்ய விரும்பினேன். இதனால் வரும் ஆபத்துகள் எனக்கு தெரியும். ஆனால் எனது அணிக்காக நான் எதையும் செய்வேன். ஆசஸ் தொடரில் 15 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்பது எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியாது. நான் அப்படி பேட்டிங் செய்ய சென்றதற்காக பெருமைப்படுகிறேன். மீண்டும் இப்படியான தேவைகள் ஏற்பட்டால் நான் மீண்டும் மீண்டும் இதைச் செய்வேன்!” என்று கூறியிருக்கிறார்!