இந்த இளம் வீரருக்கு இன்னும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது விசித்திரமாக இருக்கிறது – டேல் ஸ்டெயின் கேள்வி

0
1802
Dale Steyn SRH

இந்த ஐ.பி.எல் தொடர் விளையாடும் வீரர்களுக்கு நெருக்கடியைத் தருகிறதோ இல்லையோ ஆனால் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்களுக்குப் பெரிய நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. காரணம் பல இந்திய இளம் வீரர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். கூடவே அஷ்வின், உமேஷ் யாதவ், சஞ்சு சாம்சன் போன்றவர்களும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களிலிருந்து யார் யாரை வருகின்ற 20/20 உலகக்கோப்பை அணியில் எடுப்பது என்ற பெரிய தலைவலி இந்திய தேர்வாளர்களுக்குக் காத்திருக்கிறது!

இந்த வகையில் தற்போது ஹைதராபாத் அணிக்காக நம்பர் 3-ல் விளையாடி வரும் ராகுல் திரிபாதியும் தன் சிறப்பான அதிரடி பேட்டிங்கால் இந்திய தேர்வாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். இதுவரை இந்த தொடரில் எட்டு ஆட்டங்களில் ஆடியிருக்கும் ராகுல் திரிபாதி 228 ரன்களை, 45.60 என்ற சராசரியில், 174.05 என்ற பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். ஐ.பி.எல் 2017 ஆம் ஆண்டு சீசனிலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், புனே, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி, தற்போது ஹைதராபாத் அணிக்காக 8.5 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இவரைப்பற்றி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெயின் கூறும் பொழுது “ராகுல் திரிபாதி இந்திய 20/20 அணியில் இடம்பெறுவார் என்று நிச்சயம் நம்புகிறேன். ஐ.பி.எல் இளம் வீரர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்ட நல்ல களமாக இருக்கிறது. இங்கிருந்து இந்திய 20/20 அணிக்கு வீரர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஆனால் அவர் இதுவரை இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது விசித்திரமாக உள்ளது. விராட்கோலி பேட் செய்யும் நம்பர் 3-ல் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். ஆனால் அதற்கான திறமை இவரிடம் இருக்கிறது. தன் திறமையின் மூலம் தொடர்ந்து தனக்கான வாய்ப்புகளுக்கான கதவை இவர் திறக்கிறார். அவர் ஆட்டம் நல்ல முதிர்ச்சியாக இருக்கிறது” என்று பாராட்டி நம்பிக்கையாகப் பேசியிருக்கிறார்!