இப்படிப்பட்ட பிளேயர் என்னோட டீம்ல இருக்கணும்னு அவசியமில்லை – ரோகித் சர்மா பேட்டி!

0
6153

இடது கை பேட்ஸ்மேன்கள் எனது அணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என பேட்டி அளித்திருக்கிறார் ரோகித் சர்மா.

இலங்கை அணியுடன் நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் வருகிற 50 ஓவர் உலகக்கோப்பைக்கு எடுக்கும் பயிற்சி தொடர்களாக பிசிசிஐ பார்த்து வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டையும் வென்று தொடரையும் கைப்பற்றி விட்டது. மூன்றாவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் சம்பிரதாய ஆட்டமாக நடைபெறும்.

- Advertisement -

இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளிலும் வித்தியாசமான மைதானங்களில் வித்தியாசமான அணுகுமுறையுடன் விளையாடியது. ஆனால் பேட்ஸ்மேன்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இரண்டு போட்டிகளிலுமே வலது கை பேட்ஸ்மன்களே முழுக்க முழுக்க பிளேயிங் லெவனில் விளையாடினர். கீழ் வரிசையில் அக்சர் பட்டேல் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். டாப் 6 பேட்ஸ்மேன்களில் எவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லை.

இந்நிலையில் இரண்டாவது போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா அளித்த பேட்டியின் போது, இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் எடுக்கப்படவில்லையே, அதற்கான காரணம் என்ன? என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா கூறுகையில்,

- Advertisement -

“டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஆனால் எனக்கு அதில் பெரிதான நம்பிக்கை இல்லை. ஏனெனில் தற்போது இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்கள் போதிய வேலைகளை செய்து முடித்து விடுகின்றனர். அவர்களே உலகத்தரம் மிக்கவர்களாக இருக்கும்பொழுது எதற்காக புதிதாக ஒன்றை நான் யோசிக்க வேண்டும். பெரும்பாலான போட்டிகளில் வலது கை பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிர் அணிக்கு அழுத்தமும் கொடுக்கின்றனர். அதேபோல் சொந்த அணியின் அழுத்தத்தையும் எடுத்து விடுகின்றனர் என்பதால் நான் அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூரியகுமார் யாதவ், இசான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்குமா? எனக் கேட்டால், என்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. இது 50 ஓவர் உலகக் கோப்பையை நோக்காக கொண்டு விளையாடப்பட்டு வரும் தொடர். அதே நேரம் அடுத்தடுத்து பல போட்டிகள் ஓய்வின்றி விளையாட இருக்கிறோம். ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் முழு உடல்தகுதியுடனும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும். இதை பொறுத்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்போதைக்கு இவ்வளவு தான் என்னால கூற முடியும்.” என ரோகித் சர்மா பேட்டி அளித்தார்.

இவர் கூறியதை வைத்துப் பார்க்கையில் இந்திய அணி இந்த குறிப்பிட்ட 11 வீரர்களைக் கொண்டு பயணிக்க இருக்கிறது. வெகு சில வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கலாம். குறிப்பாக இசான் கிசான், சூரியகுமார் யாதவ் இருவரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் பிளானில் இருக்கிறார்கள். ஆனால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிகிறது.